சின்னசேலம்: சின்னசேலம் அருகே நண்பரின் மனைவியை அபகரிக்க முயன்று ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டிய வழக்கில் போலி சாமியார் கைது செய்யப்பட்டார். அவரது செல்போன், லேப்டாப்களில் பல பெண்களின் ஆபாச படங்கள் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே வாசுதேவனூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (37), டிரைவர். மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அங்குள்ள அய்யனாரப்பான் கோயிலுக்கு சின்னசேலம் போயர் தெருவை சேர்ந்த முத்தையன் (42) என்பவர் அடிக்கடி வந்துள்ளார். அப்போது ஆனந்துக்கும், முத்தையனுக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாகினர். முத்தையனுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். அவ்வப்போது குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள்.
இந்நிலையில் முத்தையன் வாசுதேவனூரில் வீடு கட்ட இடம் வேண்டும் என்று ஆனந்திடம் கேட்டுள்ளார். அப்போது ஆனந்துக்கு பணம் தேவைப்பட்டதால் தன்னிடம் இருந்த 50 சென்ட் இடத்தை ரூ.4 லட்சத்துக்கு முத்தையனிடம் விற்றுள்ளார். அங்கு முத்தையன் ஒரு கொட்டகை அமைத்து தங்கி சாமியாராக மாறி குறி சொல்லி வந்துள்ளார். அடிக்கடி ஆனந்த் வீட்டுக்கு செல்வதால் அவரது மனைவியுடன் முத்தையனுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதெரிந்து ஆனந்த் மனைவியையும், சாமியார் முத்தையனையும் கண்டித்துள்ளார். ஆனாலும் இது தொடர்ந்ததாக தெரிகிறது.
இதனால் ஆனந்த், தனது இடத்தை திருப்பி கொடுத்து விடு, பணத்தை தந்து விடுகிறேன் என கூறியுள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். மேலும் ஆனந்தின் மனைவிக்கு டார்ச்சர் கொடுத்துள்ளார். கடந்த 15ம் தேதி இரவு 11.30 மணிக்கு முத்தையன், ஆனந்த் வீட்டுக்கு சென்று அவரது மனைவியை அசிங்கமாக திட்டி, தாக்கியுள்ளார். மேலும் ஆனந்திடம் உன் மனைவி என்னுடன் இருந்த போட்டோ, வீடியோவை பேஸ்புக், யூடியூப் ஆகியவற்றில் போட்டு விடுவேன், இடத்தை திருப்பி கேட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து ஆனந்த் சின்னசேலம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், முத்தையன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். விசாரணையில் அவர் போலி சாமியார் என்று தெரிய வந்தது. அவரது லேப்டாப், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீசார் ஆராய்ந்த போது பல பெண்களின் 50க்கும் மேற்பட்ட ஆபாச படங்கள், வீடியோக்கள் இருந்ததாக தெரிகிறது. அதனால் அவருக்கு மேலும் பல பெண்களிடம் தொடர்பு இருந்ததா, அவர்களை மிரட்டி பணிய வைத்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.