Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சின்னாளபட்டி அருகே தீயில் கருகி 40 ஆடுகள் பலி: பட்டியை மூடியதால் தப்பிக்க முடியாத பரிதாபம்

நிலக்கோட்டை: சின்னாளபட்டி அருகே, பருத்திக் காட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி பட்டியில் அடைத்து வைத்திருந்த 40 ஆடுகள் கருகி பலியாயின. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, சின்னாளபட்டி அருகே உள்ள பித்தளைப்பட்டியைச் சேர்ந்தவர் மெம்மேலி (50). இவர், 300க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும், விவசாய நிலங்களில் ஆட்டுக் கிடை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் பிள்ளையார்நத்தம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். பகல் நேரங்களில் ஆட்டுக்குட்டிகளை பட்டியில் அடைத்துவிட்டு, பெரிய ஆடுகளை மட்டும் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வார். இரவு 7 மணியளவில் ஆடுகளை பட்டிக்கு கொண்டு வந்து அடைப்பார்.

இந்நிலையில், நேற்று காலை 40க்கும் மேற்பட்ட ஆட்டுக்குட்டிகளை பட்டியில் அடைத்து வைத்துவிட்டு ஒரு நாயையும் காவலுக்கு வைத்துவிட்டு வழக்கம்போல ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். நேற்று மாலை பட்டி அருகில் உள்ள பருத்திக் காட்டில் தீப்பிடித்து பரவியது. காற்றின் வேகத்தால் பட்டிக்கும் தீப்பிடித்து பரவி எரிந்தது. இதனால், பட்டியில் சிக்கிய ஆட்டுக்குட்டிகள் வெளியே வரமுடியாமல் அங்கும் இங்கும் கத்திக் கொண்டு ஓடின. நாயும் தீயில் சிக்கி ஓலமிட்டது. அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். ஆனால், பட்டியில் இருந்த 40க்கும் மேற்பட்ட ஆட்டுக் குட்டிகள், நாய் ஆகியவை தீயில் கருகி பரிதாபமாக இறந்தன. மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய மெம்மேலி ஆட்டுக்குட்டிகள் இறந்து கிடந்ததைப் பார்த்து கதறி அழுதார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.