வாஷிங்டன்: சீன அமைச்சர் மரண விவகாரத்தில் முக்கிய திருப்பமாக, அவருக்கு பெண் நிருபருடன் ஏற்பட்ட தகாத உறவால் அவர் மர்மமான முறையில் இறந்ததாக அமெரிக்க புலனாய்வு நாளிதழ் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. சீன நாட்டின் வெளிவிவகார அமைச்சராகப் பணியாற்றிய கின் காங், கடைசியாக கடந்த ஜூன் மாதம் பொதுவெளியில் காணப்பட்டார். அதன்பின் அவர் என்ன ஆனார்? எங்கே இருக்கிறார்? என்ற தகவல்கள் இல்லை. அதனால் அவர் இப்போது உயிருடன் இல்லை என்றும், அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும், சீன அரசால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்றும் பல்வேறு செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் கின் காங் மாயமான விவகாரம் மீண்டும் சர்வதேச விவாதப் பொருளாகியுள்ளது. ‘பொலிட்டிகோ’ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ‘கடந்த ஜூலை மாதம் பெய்ஜிங்கில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கின் காங் காலமானார் என்று சீன அரசாங்கத்தின் இரண்டு உயர் அதிகாரிகள் கூறினர்’ என்று தெரிவித்துள்ளது. அதேநேரம் அமெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்’ எழுதியுள்ள கட்டுரையில், ‘அமெரிக்காவிற்கான சீனத் தூதராக கின் காங் பணியாற்றிய காலத்தில், அவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்தது. திருமணத்திற்குப் புறம்பான தகாத உறவு குறித்து சீன அரசுக்கு தெரியவந்தது. ரகசிய விசாரணையில், அமெரிக்க குடியுரிமை பெற்ற சீன அதிகாரியான பீனிக்ஸ் டிவி பெண் நிருபர் ஃபூ சியாயோயனுடன், அமைச்சர் கின் காங்கிற்கு உறவு இருந்தது. இவரது உறவானது சீனாவின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது.
மேலும் வாடகைத் தாய் மூலம் கின் காங் பெண் குழந்தையை பெற்றெடுத்ததாகவும், தற்போது தாய் மற்றும் குழந்தை இருக்கும் இடமும் தெரியவில்லை. இவ்விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங், கடந்த ஜூன் மாதம் சீன வெளியுறவு அமைச்சர் பதவியில் இருந்து கின் காங்கை உடனடியாக நீக்கினார். அவருக்குப் பதிலாக முன்னாள் தூதர் வாங் யீ-யை நியமித்தார். அதிபர் ஜி ஜின்பிங்கின் நெருங்கிய நண்பராக இருந்த கின் காங், மிகவும் நம்பிக்கைக்கு உரிய நண்பர் என்ற அடிப்படையில் கிங் கிங்காவுக்கு அமெரிக்காவுக்கான சீனத் தூதர் பதவியை கொடுத்தார். ஆனால் கிங் காங்கின் மரணத்திற்கு திருமணத்திற்குப் புறம்பான உறவுதான் காரணம்’ என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.