புதுடெல்லி: அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் மீது உரிமை கோரி சீனா வெளியிட்ட புதிய வரைபட பிரச்னை மிகவும் தீவிரமானது என குறிப்பிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இதுபற்றி பிரதமர் மோடி பேச வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன், சீனா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடத்தில் அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பகுதிகளை அதன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. சீனாவின் இத்தகைய நடவடிக்கை எல்லை பிரச்னைக்கு தீர்வு காண்பதை மேலும் சிக்கலாக்கும் என வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியிருந்தார்.
இந்நிலையில், கர்நாடகா புறப்படும் முன்பாக டெல்லியில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘இந்த வரைபட பிரச்னை மிகவும் தீவிரமானது. நான் லடாக் சென்று விட்டு திரும்பி உள்ளேன். லடாக்கில் ஒரு அங்குல நிலத்தை கூட நாம் இழக்கவில்லை என பிரதமர் கூறி வருவது முழு பொய். அங்கு சீனா நமது நிலத்தை அபகரித்துள்ளதை லடாக் மக்கள் அனைவரும் அறிவார்கள். எனவே, இதைப் பற்றி எல்லாம் பிரதமர் மோடி பேச வேண்டும்’’ என்றார்.