Tuesday, April 23, 2024
Home » சீன பிரச்னையை திசை திருப்ப ஒன்றிய பாஜ போடும் கச்சத்தீவு நாடகம்: ஒப்பந்தத்துக்கு எதிராக பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தவர் கலைஞர்; ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சிகள்

சீன பிரச்னையை திசை திருப்ப ஒன்றிய பாஜ போடும் கச்சத்தீவு நாடகம்: ஒப்பந்தத்துக்கு எதிராக பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தவர் கலைஞர்; ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சிகள்

by Karthik Yash

10 ஆண்டு காலமாக தமிழ்நாட்டைப் பற்றிய அக்கறை சிறிதளவு கூட இல்லாமல் இருந்து விட்டு, திடீரென கச்சத்தீவு விவகாரத்தைக் கிளறியிருக்கிறது பாஜ. எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டியதோடு நின்று விட்டது… தமிழகத்துக்கு என, மக்கள் பெருமளவில் பயன்பெறும் திட்டம் எதுவும் தரவில்லை. எனவே, இதைப்பற்றிச் சொல்வதற்கு பாஜவிடம் எதுவுமில்லை. பிரதமரின் ‘தமிழ்ப்பாசம்’, தமிழர்கள் மீதான பற்று பேச்சளவில்தான் உள்ளதா என்ற கேள்விக் கணைகள் நாலாபுறமும் துளைத்துக் கொண்டிருக்க, இதையெல்லாம் எதிர் கொள்ள முடியாத பாஜ தொட்டதற்கெல்லாம் திமுக அரசின் மீது பழியையும் சுமத்தி அதன் மூலம் தமிழர் வாக்குகளை அள்ள சதி வலை பின்னி வருகிறது. இதுபோல்தான் கச்சத்தீவு விவகாரத்திலும் பொய் பிரசாரம் செய்து வருகிறது.

கச்சத்தீவு விவகாரம் இன்று நேற்றல்ல… பல ஆண்டுகளாகவே விவாதிக்கப்பட்டு வந்துள்ளது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற தீர்மானத்தை திமுக பல முறை நிறைவேற்றி, அதற்கான அழுத்தத்தை ஒன்றிய அரசுக்குக் கொடுத்து வந்திருக்கிறது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள இந்த தருணத்தில் திடீரென இதை பேசுகிற அளவுக்கு அங்கு அவ்வளவு பெரிய பிரச்னை உருவெடுத்துள்ளதா என்றால், அதுவுமில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) கேள்வி எழுப்பி பெறப்பட்ட தகவல்களைத்தான் பாஜ தலைவர்கள் வெளியிட்டு பேசி வருகின்றனர். அதிலும் முரண்பாடு உள்ளது.

அதாவது, 27.1.2015ம் ஆண்டு கச்சத்தீவு தொடர்பாக ஆர்டிஐ-யில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதில், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்று இந்தியா ஒப்புக் கொண்டதை நியாயப்படுத்தும் வகையில் இருந்தது. தற்போது, தமிழ்நாடு மாநில பாஜ தலைவர் அண்ணாமலை, கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னணி குறித்து கேட்டிருந்தார். இதற்கு வெளியுறவு அமைச்சகம் அளித்த பதிலில், இந்தியா சுதந்திரம் அடைந்தது முதலே கச்சத்தீவுக்கு இலங்கை உரிமை கோரி வந்ததாகவும், 1961ம் ஆண்டில் அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, இந்த சிறிய தீவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டியது கிடையாது எனவும், இதனால் இலங்கைக்கு விட்டுத்தர தயாராக இருந்தார்.

கடந்த 1973ம் ஆண்டு கொழும்புவில் நடந்த வெளியுறவு துறை அதிகாரிகள் கூட்டத்தில் தான் இலங்கைக்கு கச்சத்தீவை வழங்க முடிவு எடுக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது. இதை வைத்து பாஜ விஷம பிரசாரத்தில் இறங்கியுள்ள நிலையில், இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கடந்த 1974ம் ஆண்டு நட்பு ஒப்பந்த அடிப்படையில்தான் இலங்கைக்கு கச்சத்தீவு வழங்கப்பட்டது. இதுபோன்றுதான் வங்க தேசத்துடன் மோடி அரசு எல்லைப் பகுதிகளை பரிமாறிக் கொண்டுள்ளது என குறிப்பிட்டிருக்கிறார்.

1974ம் ஆண்டு இரு நாடுகளிடையே நடந்த பரிமாற்றத்தை பிரதமர் மோடி இப்போது கிளப்புவதற்கு காரணம் என்ன என கேள்வி எழுப்பியுள்ள ப.சிதம்பரம், 1.9 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கச்சத்தீவை அளித்து, 6 லட்சம் தமிழர்களை மீட்டு புது வாழ்வு தந்தவர் இந்திரா காந்தி. ஆனால், 2,000 சதுர கி.மீ பரப்பளவை சீனா அபகரித்துள்ள போதும் எந்த சீன படையும் இந்திய மண்ணில் இல்லை என உண்மையை மறைத்து நியாயப்படுத்தியவர் மோடி. உண்மையில் சீனா அபகரித்துள்ள நிலம் இந்த சிறிய தீவை விட ஆயிரம் மடங்கு பெரியது என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இதுபோல், காங்கிரஸ் தலைவரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஆனந்த் சர்மா உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜ கூறுவது பொய் என்பதற்கான ஆதாரங்களையும் பட்டியலிட்டுள்ளனர். இது ஒரு புறம் இருக்க, திமுக அரசு மீது பாஜ பழி போட துடிக்கும் பாஜ, கச்சத்தீவு நமது அரசுரிமை, அதை இலங்கைக்கு கொடுக்க தமிழ்நாடு சம்மதிக்காது என கலைஞர் போராடிய வரலாற்றை உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. 1971ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கை அரசு சொந்தம் கொண்டாடியதும், அன்றைய முதல்வர் கலைஞர் ‘கச்சத்தீவு நமது அரசுரிமை’ என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்கு சட்டப்பேராசிரியர் எஸ். கிருஷ்ணசாமிக்கு உத்தரவிட்டார்.

கச்சத்தீவானது இந்தியாவுக்குத் தான் சொந்தம் என்பதற்கான அறிக்கையை 1973 டிசம்பரில் முதல்வர் கலைஞர் வெளியிட்டார். மேலும் அப்போதைய ஒன்றிய வெளியுறவு துறை செயலாளர் கேவல் சிங்கையும், பிரதமர் இந்திரா காந்தியையும் நேரில் சந்தித்து கச்சத்தீவு இந்தியாவுக்குத் தான் சொந்தம் என்பதற்கான அனைத்து ஆவணங்கள், ஆதாரங்களை வழங்கினார். மேலும் எதிர்ப்பை மீறி கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலைஞர் நிறைவேற்றினார். 1974 ஆகஸ்ட்டில் பேரவையிலும் தீர்மானம் கொண்டு வந்தார்.

கலைஞர் கச்சத்தீவை தாரை வார்க்கவில்லை. ஏனென்றால் அவர் எந்தக் காலத்திலும் இந்திய நாட்டின் பிரதமராக இருந்தது இல்லை.பிரதமராக இருந்திருந்தால் மட்டும் தான் அதனைச் செய்திருக்க முடியும். இந்த அடிப்படையை கூட பாஜ தெரிந்திருக்காதது ஏன் என பலரும் வியப்பை வெளிப்படுத்தியுள்ளனர். வரலாற்று உண்மை இவ்வாறிருக்க, சம்பந்தமே இல்லாமல் கச்சத்தீவு விவகாரத்தை பாஜ கையில் எடுத்ததற்கு முக்கியக் காரணம், அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையில் 30 இடங்களை சீனா பெயர் மாற்றம் செய்திருப்பதை மறைக்கவே என்பது அம்பலம் ஆகியுள்ளது.

இந்திய எல்லைப் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு ஒன்றிய பாஜ அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 10 ஆண்டாக அதிகரித்து வந்துள்ளது. இந்திய எல்லையில் சுமார் 4,000 கி.மீ பகுதியை சீனா அபகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டில் கூட அருணாச்சல பிரதேசத்தில் அசல் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்திய பகுதியில் 4.5 கிமீ தொலைவுக்கு சீனா ஊடுருவியதோடு, அங்கு 101 குடியிருப்புகளை கட்டி புதிய கிராமத்தையே உருவாக்கியது. இது குறித்து வெளியான சாட்டிலைட் படங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்தது.

தற்போது அருணாசல பிரதேசத்தில் 30 இடங்களுக்கு சீனா மற்றும் திபெத்திய மொழிகளில் புதிய பெயர்களை சீன சிவில் விவகார அமைச்சகம் சூட்டியுள்ளது. இது மே 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேற்கண்ட இடங்களுக்கு பிற மொழி பெயர்களை குறிப்பிடுவது சீனாவின் பிராந்திய உரிமைகோரல் மற்றும் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கை என சீனா உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நெருங்கும்போதெல்லாம் எல்லையில் ராணுவ வீரர்கள் பதிலடி, ராணுவ வீரர்கள் உயிரிழப்பு, குண்டு வீச்சு போன்றவற்றை காட்டி நாட்டுப்பற்றுடன் இருப்பது போல் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜ அரசு தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளது. ராணுவ வீரர்களின் உயிரிழப்பை கூட அரசியலாக்கி ஆதாயம் பார்த்து வந்தது. ஆனால், நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் சீனாவின் செயல்பாடு ஒன்றிய பாஜ அரசுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இதனை மறைக்கவே கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பி திசை திருப்புகிறது பாஜ என அரசில் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

* ஏன் இவ்வளவு வேகம்?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சமானிய மக்கள் யாராவது கேள்வி கேட்டால், ‘அதெல்லாம் சொல்ல முடியாது. இது நாட்டின் பாதுகாப்பு பிரச்னை’ என்றோ, ‘அரசின் கொள்கை முடிவு’ என்றோ ஏதோ ஒரு காரணத்தை கூறி தகவல் தராமல் இழுத்தடிப்பதும், மறுப்பதுதான் சிக்கலான விவகாரங்களில் அதிகாரிகளின் பெரும்பான்மை பதிலாக இருந்திருக்கிறது. ஆனால், அண்ணாமலை சார்பில் கேட்கப்பட்ட ஆர்டிஐக்கு அவசர கதியில் அத்தனை தகவல்களையும் அள்ளிக் கொடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* உரிமையெல்லாம் எடுத்துக்கிட்டீங்க பழிய ஏன் எங்க மேல போடுறீங்க?
கல்விப் பட்டியலை மாநிலத்திடம் இருந்து ஒன்றிய அரசு பறித்து, மத்திய பட்டியலில் சேர்த்து விட்டது. இதுபோல், நீட் தேர்வை செயல்படுத்த முடிவு எடுத்ததும் ஒன்றிய பாஜ அரசுதான். தற்போது சிஏஏவை செயல்படுத்த துடிக்கிறது பாஜ. மாநில அரசின் உரிமைகள் எல்லாவற்றையும் தன் வசப்படுத்திக் கொண்டு, மக்கள் நலனை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் செயல்படுத்தி விட்டு, பிரச்னை என்று வரும்போது மாநில அரசு மீது மொத்தமாகப் பழிபோட்டு தப்பித்துக் கொள்ளப் பார்ப்பது ஒன்றிய பாஜ அரசின் உத்தியாகவே ஆகி விட்டது. அன்று கச்சத் தீர்வு விவகாரத்தில் கூட கலைஞர் தனது எதிர்ப்பை தவறாமல் பதிவு செய்தார். ஆனால், அதில் முடிவு எடுத்தது ஒன்றிய அரசுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்திய வரைபடத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கியது யார்?
மாநில உரிமை, தமிழர் உரிமைகளில் எந்த வித சமரசமும் செய்து கொள்ள தயாரில்லாத கலைஞர், கச்சத்தீவு இந்தியாவுக்கானது என்பதை நிலைநாட்ட அத்தனை ஆதாரங்களையும் ஒன்றிய அரசிடம் வழங்கியிருந்தார். ஆனால், இது நடந்து ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1983ம் ஆண்டு எம்ஜிஆர் தமிழ்நாடு முதல்வராக இருந்தபோதுதான், கச்சத்தீவை இந்திய வரை படத்தில் இருந்து நீக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆர்சிஎப் 23-75/83 என்ற எண் கொண்ட உத்தரவை, அப்போதைய ராமநாதபுரம் கலெக்டர் வெளியிட்டார் என்பது குறிப்பிடதக்கது.

* சிறிய தீவு தான்
கச்சத்தீவு 285 ஏக்கர் பரப்பளவு மட்டுமே கொண்ட சிறிய தீவு. 300 மீட்டர் அகலமும் 1.6 கி.மீ நீளமும் கொண்டது. மனிதர்கள் யாரும் இங்கு வசிக்கவில்லை என்றாலும், ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறும் புனித அந்தோணியார் தேவாலய விழாதான் தமிழர்களுடன் இந்த தீவை ஒன்றிணைக்கிறது.

* நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த முரசொலி மாறன்
1974ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதல்வர் கலைஞர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தார். பின்னர் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது, கச்சத்தீவு இந்தியாவுக்குதான் சொந்தம் என்பதற்கான ஆதாரங்களை நாடாளுமன்றத்தில் வழங்கி பேசிய எம்பி முரசொலி மாறன், கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததன் மூலம் தமிழ்நாட்டுக்குத் தான் முதல் ஆபத்து என்று முழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

* சாதனையை மறைப்பதா?
இலங்கைக்கு கச்சத்தீவை இந்திரா காந்தி தாரை வார்த்து விட்டதாக பாஜ குற்றம் சாட்டி வருகிறது. அதேநேரத்தில், குமரிக்கடல் பகுதியில் சுமார் 4,000 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட வெட்ஜ் பேங்க் பகுதியை இலங்கையிடம் இருந்து பெற்று இந்தியாவுக்குச் சொந்தமாக்கியுள்ளார் இந்திரா காந்தி. இதை சாமர்த்தியமாக மறைத்து விட்டு, தங்கள் தவறை வெளியில் தெரியாமல் மறைக்க கச்சத் தீவு பற்றி பாஜ பேசி வருகிறது.

எதிர்ப்பை பதிவு செய்த திமுக அரசு
* மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கையை முன்னெடுத்து வரும் திமுக, மத்தியில் கூட்டாட்சியில் இருந்த போதும் தமிழர் உரிமையை விட்டுக் கொடுத்தது கிடையாது.
* தமிழ் மொழி மேம்படவும், தமிழர் செம்மாந்த வாழ்வு வாழவும் பேரறிஞர் அண்ணாவும், கலைஞர் வித்திட்டதும், இன்று பல தமிழ்க்குடும்பங்கள் இதனால் விருட்சமாக வளர்ந்திருப்பதும், தமிழர் வரலாறு தெரியாமல் வடக்கிலிருந்து வந்து வலை விரித்துக் காத்திருக்கும் பாஜவுக்கு புரியாமலிருப்பது வியப்பில்லை.
* தமிழ்நாட்டின் உரிமைக்கும், தமிழர் தம் வளமைக்கும் கேடு ஏற்படும்போதெல்லாம் திமுக ஆட்சியில் இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் குரல் கொடுத்து வந்திருக்கிறது.
* எதிர்ப்பை மீறி கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலைஞர் நிறைவேற்றினார். 1974 ஆகஸ்ட்டில் பேரவையிலும் தீர்மானம் கொண்டு வந்தார்.
* கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த வரலாறு எதுவும் தெரியாமல் மாநில அரசான திமுக, இந்தியாவின் ஒரு பகுதியை தாரை வார்த்தது என்று அடிப்படை அறிவு இல்லாமல், குறைந்தபட்ச நேர்மையில்லாமல் பேசுவது வெட்கக்கேடானது, கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டே எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.
* மேலும், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரன் சிங்கை சந்தித்து, கச்சத்தீவை இலங்கைக்குக் தர தமிழ்நாடு அரசு ஒருபோதும் சம்மதிக்காது என தெளிவுபடுத்தினார் கலைஞர்.
* தமிழ்நாடு அரசின் கடுமையான எதிர்ப்பையும் மீறி இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்தது இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு உகந்ததாக அமையாது என்று நாடாளுமன்றத்தில் அப்துல் சமது எச்சரிக்கை விடுத்தார்.
* கச்சத்தீவை இலங்கை்குத் தரக்கூடாது என 1973 அக்டோபர் 8ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு கலைஞர் கடிதம் எழுதினார். பின்னர் இந்திய வெளியுறவு துறை செயலாளர் கேவல் சிங் மற்றும் இந்திரா காந்தியிடம் கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்க தேவையான அத்தனை ஆதாரங்களையும் நேரில் சென்று வழங்கினார்.
* 1971ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கை அரசு சொந்தம் கொண்டாடியபோதே அன்றைய தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கச்சத்தீவு நம்முடைய அரசுரிமை என்பதற்கான ஆதாரங்களைத் திரட்ட சட்டப்பேராசிரியர் எஸ். கிருஷ்ணசாமிக்கு உத்தரவிட்டார்.
* கச்சத்தீவு இந்தியாவுக்குத் தான் சொந்தம் என்பதற்கான அறிக்கையை 1973 டிசம்பரில் முதல்வர் கலைஞர் வெளியிட்டார். இதனை மீறித்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது.
* இந்திய பிரதமராக இந்திரா காந்தியும், இலங்கை பிரதமராக மாவோ பண்டாரநாயகாவும் சேர்ந்து 1974 ஜூன் 26ம் நாள் கச்சத்தீவு உரிமையை மாற்ற ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது பிரதமர் இந்திரா காந்தியை, திமுக ஆதரிக்கவில்லை.
* ஒரு ஒப்பந்தம் என்றால் சட்டத் திருத்தமோ, அல்லது ஒரு சட்டமோ நிறைவேற்றி இருக்க வேண்டும். அப்படி எதுவும் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. அப்படிக் கொண்டு வரப்பட்டு, அதனைத் திமுக ஆதரித்ததும் இல்லை.

* ஆவணங்களை தர உத்தரவிட்ட சார்பு செயலர்
கச்சத்தீவு தொடர்பான ஆவணங்களை ஆர்டிஐ மூலம் ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் வழங்கியதில் பகிரங்க மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த 5.3.2024 அன்று கச்சத்தீவு தொடர்பான ஆவணங்களை கேட்டு ஆர்டிஐ விண்ணப்பம் செய்யப்படுகிறது. விண்ணப்ப எண் MOEAF/R/E/24/000328. இதில் விண்ணப்பதாரர் பெயர் வழக்கத்துக்கு மாறாக மறைக்கப்பட்டுள்ளது. இதுபோல், விண்ணப்பத்துக்கு பதில் தர வேண்டிய பொது தகவல் அலுவலர் யார் என்ற விவரமும் இடம் பெறவில்லை. ஆனால், இந்த விண்ணப்பத்துக்கு சிஎன்வி & ஐ பிரிவில் உள்ள சார்பு செயலாளர் அஜய் ஜெயின் என்பவர் 12/03/2024 அன்று உத்தரவு பிறப்பிக்கிறார். அதன் அடிப்படையில்தான் 31-03-2024 அன்று 17 பக்க ஆவணங்கள் மனுதாரருக்கு எந்த கட்டணமும் பெற்றுக்கொள்ளாமல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சார்பு செயலாளர் அஜய் ஜெயின் எந்த பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்தார் என்ற விவரத்தையும் வெளியுறவு அமைச்சகம் வெளியிடவில்லை. இது பெரும் மோசடி நடந்துள்ளதை அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

You may also like

Leave a Comment

fifteen − fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi