பெய்ஜிங்: இஸ்ரேலிய தூதரக அதிகாரி ஒருவருக்கு சீனாவில் கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு வார கால மோதலில் 1,200 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களும், 1,530 பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் மற்றும் நூறாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இதற்கிடையில், தீவிரவாதிகளின் தாக்குதல்களைத் தொடர்ந்து காஸா பகுதியில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை நடத்தத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேலிய தூதரக அதிகாரி ஒருவருக்கு சீனாவில் கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. பெய்ஜிங்கில் உள்ள இஸ்ரேலின் தூதரகத்தில் பணிபுரிந்த தூதரக அதிகாரி, தூதரகத்திற்கு அருகாமையில் தாக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உடல் நிலை சீராக இருப்பதாகவும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக, பெய்ஜிங்கிற்கான இஸ்ரேலின் தூதர் சமீபத்திய ஹமாஸ் தாக்குதல்களை சீனா கண்டிக்காதது குறித்து ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு சீனா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என இஸ்ரேல் தூதரகம் வலியுறுத்தியிருந்த நிலையில் கத்திக்குத்து நிகழ்ந்துள்ளது.
இதனால் இஸ்ரேலுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் உருவாகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. தற்போதைய மோதலில் சீனாவின் நிலைப்பாடு குறித்து இஸ்ரேலிய அரசாங்கம் தனது கவலைகளைப் பற்றி குரல் கொடுத்து வருகிறது.
இஸ்ரேலுக்கு ஜோர்டான் மன்னர் எச்சரிக்கை:
பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக அகற்றும் எந்த ஒரு நடவடிக்கையிலும் இஸ்ரேல் ஈடுபடக் கூடாது என ஜோர்டான் மன்னர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காசாவிற்குள்ளே கூட அவர்களை இடம் மாற்ற கட்டாயப்படுத்தக் கூடாது என ஜோர்டான் மன்னர் அப்துல்லா எச்சரித்துள்ளார். ஹமாஸ் குழுவினர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.