சீனா: சீனாவில் நடைபெற்று வரும் உலக பல்கலைக்கழக விளையாட்டின் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு ஒரேநாளில் 3 தங்கம் கிடைத்துள்ளது. சீனாவின் ஷெங்டு பகுதியில் உலக பல்கலைக்கழக விளையாட்டுகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றுள்ளார். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் இறுதி போட்டியில் 252.5 புள்ளிகள் பெற்று தங்கத்தை தட்டி சென்றார். இதே பிரிவில் கடந்த 2019ம் ஆண்டு இளவேனில் வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை சேர்ந்த மேரி கரோலின் 2வது இடத்தையும், சீனாவின் ஹாங்சிங் 3வது இடத்தையும் பெற்றனர். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு போட்டியில் இந்தியாவின் மனு பக்கர், யாஷ்வினி மற்றும் அபிதன்யா ஆகியோர் அடங்கிய குழு தங்கம் வென்றது. 1714 புள்ளிகளை பெற்றனர். இதேபோல ஒற்றையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதி போட்டியில் 239.7 புள்ளிகள் பெற்று மனு பக்கர் தங்கம் வென்றார். ஒரேநாளில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனைகள் 3 தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.