கொழும்பு: கொழும்பு துறைமுகத்தில் ஷி யான் 6 என்ற ஆராய்ச்சி கப்பலை நிறுத்தும் சீனாவின் கோரிக்கை குறித்து இலங்கை பரிசீலித்து வருகிறது.சீனாவை சேர்ந்த ஆராய்ச்சி கப்பல் ஷி யான். இந்த கப்பல் மொத்தம் 1115 டன் எடை, 129 மீ. நீளம் மற்றும் 17 மீ அகலம் கொண்டது. இலங்கையின் தேசிய மீன் வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு டன் இணைந்து கடலில் ஆராய்ச்சிகளை சீன கப்பல் மேற்கொள்ள உள்ளது. அக்டோபர் மாதம் இலங்கைக்கு வரும் கப்பல் நவம்பர் வரை இலங்கையில் நிற்கும். இந்நிலையில் ஷி யான் 6 கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்துவதற்கு அனுமதி கேட்டு சீன வெளியுறவுதுறை இலங்கை வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி கோரியுள்ளது. இதுகுறித்து இலங்கை வெளியுறவு துறை அதிகாரி பிரியங்கா விக்கிரமசிங்கே கூறுகையில்,‘‘ சீனாவின் கோரிக்கை குறித்து இலங்கை அரசு பரிசீலித்து வருகிறது.
சீன கப்பல் வருகை குறித்து தேதி எதுவும் முடிவாகவில்லை’’ என்றார். சீன கப்பலின் வருகைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதாலும் இரு நாடுகளுடனும் நல்ல உறவை கொண்டுள்ளதால் என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து தெரியாமல் இலங்கைக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அங்கு உள்ள மீடியாக்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவுகணைகளை கண்காணிக்கும் யுவான் வாங் 5 என்ற கப்பல் இலங்கை வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் பல நாட்கள் தாமதத்துக்கு பிறகு அந்த கப்பலை ஹம்பன் தோட்டா துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அனுமதி அளித்தது.