சாங்ஹூ: சீன ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் சாத்விக்சாய்ராஜ் – சிராக் ஷெட்டி இணை அதிர்ச்சி தோல்வியை சந்தித்ததை அடுத்து, இத்தொடரில் இந்தியாவின் பதக்க நம்பிக்கை முற்றிலுமாகத் தகர்ந்தது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர்கள் எச்.எஸ்.பிரணாய், லக்ஷயா சென் இருவரும் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்து ஏமாற்றத்துடன் வெளியேறிய நிலையில், 2வது நாளான நேற்று ஆசிய சாம்பியன்ஷிப், சுவிஸ் ஓபன், இந்தோனேசிய ஓபன் தொடர்களில் தங்கம் வென்று அசத்திய சாத்விக்சாய்ராஜ் – சிராக் ஷெட்டி இணை ஆண்கள் இரட்டையர் பிரிவில் களமிறங்கியது.
முதல் சுற்றில் சாத்விக் – சிராக் ஜோடியுடன் மோதிய இந்தோனேசியாவின் முகமது ஷோகிபுல் ஃபிக்ரி – பேகஸ் மவுலானா இணை 21-17, 11-21, 21-11 என்ற செட் கணக்கில் போராடி வென்றது. விறுவிறுப்பான இப்போட்டி ஒரு மணி 8 நிமிடங்களுக்கு நீடித்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் களமிறங்கிய சிக்கி ரெட்டி – ரோகன் கபூர் ஜோடியும் 15-21, 16-21 என்ற நேர் செட்களில் மலேசியாவின் சென் டாங் ஜி – டோஹ் இ வெய் ஜோடியிடம் தோல்வியைத் தழுவியதை அடுத்து, இந்த தொடரில் இந்தியாவின் பதக்க வேட்டை முதல் சுற்றிலேயே பரிதாபமாக முடிவுக்கு வந்தது.