ஓசூர்: ஓசூர் அருகே காரில் வந்த விவசாயியை மறித்த முகமூடி அணிந்த மர்ம கும்பல், சரமாரியாக வெட்டி கொலை செய்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஜூஜூவாடி பகுதியை சேர்ந்தவர் விவசாயி சிவராமப்பா(50). மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். நேற்று காலை சிவராமப்பா காலையில் பால் கறந்து ஊற்றி விட்டு, 8 மணியளவில் அருகிலுள்ள தோட்டத்திற்கு சென்றார். அங்கு கால்நடைகளுக்குத் தேவையான புல்லை அறுத்து, காரில் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது ரோஸ் கார்டன் பகுதியில் அவரது காரை, டூவீலரில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வழிமறித்தனர்.
சிவராமப்பா சுதாகரிக்கும் முன்பாக, அவர் முகத்தின் மீது மிளகாய் பொடியை தூவிய கும்பல், காரில் இருந்து இழுத்து வெளியே சாலையில் போட்டு, அரிவாளால் சராமாரியாக வெட்டினர். இதில் சிவராமப்பா உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் டூவீலரில் தப்பிச்சென்றது. இதுகுறித்தும் சிப்காட் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டனர். சிவராமப்பாவிற்கும், அவருடைய உறவினர்களுக்கும் சொத்து பிரச்னை நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது. இந்த பிரச்னையில் உறவினர்கள் கூலிப்படையை ஏவி, சிவராமப்பாவை கொலை செய்தார்களா அல்லது வெறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.