பொள்ளாச்சி: பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள சிறுவர் பூங்காவை முறையாக பராமரித்து பயன்பாட்டிற்குவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள மைதானம் எதிரே நகராட்சி சார்பில் சுமார் 25 ஆண்டுக்கு முன்பு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவை தனியார் அமைப்பு சார்பில் பராமரித்து வந்தன. ஆனால் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு பராமரிப்பு பணி கிடப்பில் போடப்பட்டதால் புதர் சூழ்ந்த இடமாக மாறியது. இதனால் சிறுவர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் பழுதாகி கிடந்தது.
இதையடுத்து அந்த பூங்கா பராமரிப்பின்றி பல மாதங்களாக பூட்டப்பட்டிருந்தது. அங்கு விளையாட யாரும் செல்ல அனுமதிக்கப்படாமல் இருந்தது. சிறுவர் பூங்காவை பராமரித்து, சிறுவர்கள் விளையாட வசதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சிறுவர் பூங்காவை நகராட்சியே முன்னின்றி பராமரிக்க, சில ஆண்டுக்கு முன்பு நகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டதுடன், சிறுவர் பூங்காவை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பூங்காவில் சுற்றுச்சுவர் பராமரிக்கப்பட்டதுடன், சிறுவர்கள் விளையாட விளையாட்டு உபகரணங்கள், நடைபாதையும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் பூங்கா பராமரிப்பு பணி சில ஆண்டுக்கு முன்பு நடைபெற்றாலும் அதன்பின் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளதால் புதர்கள் அதிகளவு வளர்ந்தது. இதனால், அங்கு சிறுவர்கள் விளையாடுவதை தவிர்த்தனர். தற்போது சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரங்கள் இருந்தாலும், பராமரிப்பு பணியை இன்னும் முழுமையாக நிறைவு செய்யவில்லை. இதனால் புற்கள் செடிக்கொடிகள் அதிகளவு வளர்ந்து புதர்கள் சூழ்ந்த நிலையில் உள்ளது. எனவே மகாலிங்கபுரத்தில் உள்ள சிறுவர் பூங்காவை முறையாக பராமரித்து, சிறுவர்கள் விளையாடுவதற்காக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.