Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Leader
search-icon-img
Advertisement

குழந்தைகளுக்கான புத்தக நிலையம்!

நன்றி குங்குமம் தோழி

தன் குழந்தைக்கு புத்தக வாசிப்பை பழக்கப்படுத்துவதற்காக பல இடங்களில் இருந்து புத்தகங்களை சேகரித்து, தன் வீட்டிலேயே ஒரு சிறிய நூலகத்தை அமைத்துள்ளார்ஸ்ரீ ப்ரியா. தங்கள் வீட்டிற்கு வருகின்ற மற்ற குழந்தைகளுக்கும் புத்தகத்தை அறிமுகப்படுத்தும் பழக்கம் தொடரவே, டைனி சீட்(Tiny Seed) எனும் ஒரு புத்தக நிலையத்தை துரைப்பாக்கத்தில் தொடங்கியுள்ளார். பல்வேறு நாடுகளில் இருந்தும் புத்தகங்களை சேகரித்து குழந்தைகளுக்காக அதிகப்படியான லாபநோக்கமின்றி குறைந்த விலைக்கு வழங்குவதோடு மட்டுமின்றி, புத்தக நிலையம் மற்றும் பள்ளிகளில் குழந்தைகளை கற்றல் இணை செயல்பாடுகளிலும் ஈடுபடுத்துகிறார்.

“என் குழந்தைக்கு எந்த வயதில் எந்த விதமான புத்தகங்களை கொடுக்கலாம் என்பதை சிந்தித்து, ஒரு வருட காலத்தில் அவற்றை சேகரித்து விட்டேன். புத்தக சேகரிப்பில் இருந்து பார்த்ததும் கவரக்கூடிய சில புத்தகங்களை என் மகளே எடுத்து வருவாள். தினமும் இரவு நேரத்தில் புத்தகம் வாசித்துக் காட்டுவேன். அவளுக்கு மூன்றுவயது ஆகும் வரை இந்தப் பழக்கம் தொடர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு புத்தகம் மீது ஆர்வம் ஏற்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை சேகரித்து வீட்டிலேயே நூலகம் போன்று அமைத்திருந்தேன். என் மகளுக்கு சிறந்த புத்தகங்களை வழங்குவதே என் நோக்கம். இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் என் நண்பர்கள் வட்டத்தில் இருந்தும் புத்தகங்களை சேகரிக்க தொடங்கினேன். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட புத்தகங்களை சேகரித்து நாம் மீண்டும் பயன்படுத்தும் இந்த முறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் இருக்கும். பொக்கிஷம் போன்ற இந்த புத்தகங்களை மீண்டும் மற்றொருவர் பயன்படுத்துவதில் எந்த இழிவும் இல்லை. இதை கருத்திற்கொண்டு தொடங்கப்பட்டதுதான் ‘டைனி சீட்’. வெளிநாடுகளில் வெளியிடப்பட்டு ஒருவரால் பயன்படுத்தப்பட்ட ஆங்கில புத்தகங்களை சேகரித்தும் மறு பயன்பாடாக நாம் பயன்படுத்துவதற்காக இந்த புத்தக நிலையத்தில் வைத்துள்ளேன்.

6 டாலர்கள் மதிப்புள்ள பயன்படுத்தப்பட்ட புத்தகத்திற்கு இங்கு நான் 50 முதல் 80 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்கிறேன். குழந்தைகளுக்கான அறிவு சார்ந்த இந்த புத்தகங்களை மலிவான விலையில் கிடைக்க செய்ய வேண்டும்” எனும் ஸ்ரீ ப்ரியா தன் புத்தக நிலையத்தில் குழந்தைகள் நேரம் செலவிடுவதை விரும்புகிறார்.“இவை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட புத்தகம் என்பதால் ஒரே புத்தகம் நிறைய காப்பிகள் இருக்காது.

எனினும் இங்குள்ள எல்லா புத்தகங்களும் அதிக படைப்பாற்றலுடன் அறிவை புகட்டுவதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். குழந்தைகள் இங்கு வந்து புத்தகம் வாங்கி செல்வதோடு மட்டுமின்றி அவர்களுக்கான நேரத்தை இங்கு செலவிடுவது எனக்குப் பிடிக்கும். எந்த புத்தகத்தை வாங்கப்போகிறார்கள் என்பதை எல்லாம் கடந்து இங்குள்ள பல புத்தகங்களை எடுத்து வாசித்து மகிழ்வார்கள்.

அதிகமான எழுத்துக்கள் மட்டுமின்றி படங்கள், திறந்து மூடக்கூடிய, இழுக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட அவர்களை ஏதோ ஒரு செயலில் ஈடுபட தூண்டும் புத்தகங்கள் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கின்றன. எனவே, ஆர்வத்துடன் குழந்தைகள் இங்கு நேரத்தை செலவிடுவார்கள். புத்தகம் வாங்க வரும் பெற்றோர்கள் சமயங்களில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களையும் கேட்பதால் தற்போது புத்தக நிலையத்தில் விளையாட்டுப் பொருட்களும் உள்ளன. சேகரிக்கப்பட்ட புத்தகங்களை படிப்பதற்காக அருகிலுள்ள சில பள்ளிகளிலும் சிறிய நூலக அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறேன்.

மண்ணில் விதைக்கப்பட்ட விதையின் சூழல் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் அது தானாக தன்னை பாதுகாத்துக் கொண்டு வளர்ந்துவிடும். அது போல குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை அமைத்துக் கொடுத்தால் அவர்களின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும் என்பதுதான் என் முக்கியமான நோக்கம். பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட புத்தகங்கள் என்பதால் இங்கு ஆங்கில புத்தகங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

குழந்தைகளுக்கான தமிழ் புத்தகங்களையும் இங்கு வைத்துள்ளோம். குழந்தைகளுக்கு மட்டுமின்றி, பதின் பருவத்தில் உள்ள சிறுவர்களுக்கும் இந்த வயதில் அவர்களுக்கு தேவையான வாழ்க்கை மதிப்புக்களை கற்றுக்கொடுக்கக்கூடிய புத்தகங்களும் உள்ளன. ஆசிரியர் சுதா மூர்த்தி பதின் பருவ புத்தகங்களை அதிகமாக வெளியிடுகிறார். மேலும், பேரண்டிங் பற்றிய தகவல்கள் அடங்கிய பெற்றோர்களுக்கான புத்தகங்களும் உள்ளன. பேரண்டிங் பற்றிய புத்தகங்களை அதிகப்படுத்த வேண்டும் என்ற யோசனை உள்ளது. வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட புத்தகங்கள் என்றாலும் ஆங்கில புத்தகங்களின் வார்த்தைகள் எளிதாக வாசிக்கக்கூடியதாக இருக்கும்” என்றவர், குழந்தைகளுக்கான கற்றல் இணை செயல்பாடுகள் கொண்ட அமர்வுகளை நடத்துவது குறித்தும் பகிர்ந்தார்.

“வார இறுதி நாட்களில் குழந்தைகள் ஆர்வத்துடன் வருவார்கள். வடிவங்கள், எண்கள், படங்கள், காய்கறி பழ வகைகளின் பெயர்கள் போன்றவற்றை அவர்களே கண்டறிந்து தெரிந்து கொள்ளும் விதமாக சில செயல்பாடுகளும் உள்ளன. அவர்களிடையே வாசிப்பை ஊக்குவிக்கவும் கேட்டல் திறனை மேம்படுத்தவும் கதை சொல்லி நிகழ்வுகளை நடத்துகிறோம். பள்ளிகளிலும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி வருகிறேன்.

விலை அதிகமான விளையாட்டு சாதனங்களை எல்லா குழந்தைகளும் விளையாடி மகிழ வேண்டும் என்பதற்காக சில விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெறும். அரசுப் பள்ளிக் குழந்தைகளும் இங்கு வந்து பயன்பெற வேண்டும் என்பதால், அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். படைப்பாற்றலுடன் வடிவமைக்கப்பட்ட புத்தகங்கள் குறைந்த விலையில் கிடைத்தால் எல்லோரும் அதை அணுகலாம் என்பதே என் விருப்பம்.

நான் ஐ.டி துறையில் பணியாற்றிய பின் என் மனதிற்கு நெருக்கமானதை செய்ய வேண்டும் என்ற பேரார்வத்துடன் இதனை தொடங்கினேன். மேலும், இதனை விரிவுப்படுத்த வேண்டும். பெண்கள் தாங்கள் விரும்புவதை செய்ய முன் வரவேண்டும். எதையும் ஒரு கனவோடு தொடங்கினால் உங்களுக்கான ஆதரவு நிச்சயம் கிடைக்கும்” என்றார் ஸ்ரீ ப்ரியா.

செய்தி: ரம்யா ரங்கநாதன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்