திருக்கோவிலூர்: சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிவனடியார் போக்சோவில் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே செவல்குளத்தை சேர்ந்தவர் சிவபாலன்(41). முதலில் சென்னை அம்பத்தூரில் மளிகை கடை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. 6 வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி சிவனடியாராக மாறினார். 2018ல் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த பாசார் கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு மலை மீது மடம் ஒன்று ஆரம்பித்து பாழடைந்த பிரம்மபுரீஸ்வரர் கோயிலை புதுப்பிக்கும் வேலையை தொடங்கி கட்டி வருகிறார். ஏமப்பேர் கிராமத்தை சேர்ந்த ஏழை பெண்ணின் 2 மகன்களை (17, 14 வயது), மடத்தில் தங்கி, கோயிலை பராமரிக்க அனுமதித்துள்ளார்.
நிதியுதவி அளித்து அருகே உள்ள கீழ்பாடி அரசு பள்ளியில் படிக்க ஏற்பாடு செய்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் காவல் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் சிவனடியார் குறித்து புகார் எழுதி சிறுவர்கள் போட்டுள்ளனர். 4 நாட்களுக்கு முன் புகார் பெட்டியில் இருந்து கடிதம் குறித்து குழந்தைகள் நல குழு விசாரணை நடத்தியது. இதில் சிவபாலன் 2 சிறுவர்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இது குறித்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து சிவபாலனை கைது செய்தனர்.