*நுகர்வோர் மன்ற விழாவில் விழிப்புணர்வு
மஞ்சூர் : மஞ்சூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நுகர்வோர் மன்ற துவக்க விழாவில் மாறி வரும் உணவு கலாசாரம் குழந்தைகளின் உடல் நலத்தை பாதிப்படைய செய்யும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நீலகிரி மாவட்டம், மஞ்சூர் மகாகவி பாரதியார் நினைவு அரசு உயர்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி தலைமை தாங்கினார். மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை கிரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக குன்னுார் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் கலந்து கொண்டு குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:உலகமயமாதல், தாராளமயமாதல் போன்ற பொருளாதார கொள்கைகளுக்கு பிறகு மக்கள் தொகை அதிகம் கொண்ட நம்நாடு பெரும் சந்தையாக பார்க்கப்படுகிறது. மக்கள் விளம்பரங்கள் மூலம் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர். உணவுக் கலாசாரம் மாறி வருவது குழந்தைகளின் உடல் நலத்தை பாதிப்படைய செய்துள்ளது.
பிஸ்கட்டில் உள்ள சோடியம் பை கார்பனேட், சுக்ரோஸ் ஆகியவை உடல் நலத்தை கெடுத்து குழந்தைகளை நோயாளிகளாக மாற்றி வருவதால் பிஸ்கட் குழந்தையின் கழுத்தை சுற்றி இருக்கும் பாம்பு என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். பெண்களிடம் 10ல் ஒருவருக்கு சினைப்பை நீர்க்கட்டி காணப்படுகிறது. இதற்கு இளம் வயதில் நொருக்கு தீனிகளை அதிகம் உண்பது ஒரு காரணம் எனவே பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் ஏற்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து ஓட்டுக்கு பணம் வாங்குவதை தடுப்போம், லஞ்சம் கொடுப்பதையும், வாங்குவதையும் தடுப்போம் என மாணவிகள் உட்பட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். முடிவில், ஆசிரியர் சகாயதாஸ் நன்றி தெரிவித்தார்.