தர்மபுரி: குடும்ப தகராறில் மனமுடைந்த இளம்பெண், 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, பொம்மிடி அருகே உள்ள குக்கல்மலை காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் (32), லாரி டிரைவர். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதேவி (24) என்ற பெண்ணை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கனிஷ்கா (6), ஹாசினி (4) என இரு மகள்கள் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினமும் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டதால், மனமுடைந்த ஸ்ரீதேவி 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி மாயமானார். இந்நிலையில், நேற்று காலை தமிழரசன் வீட்டில் அருகில் உள்ள பார்த்திபன் என்பவரது நிலத்தில் உள்ள விவசாய கிணற்றில், ஸ்ரீதேவி மற்றும் 2 மகள்கள் சடலமாக கிடந்தனர். தகவலறிந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள், கிணற்றுக்குள் இறங்கி மூன்று பேரின் உடல்களையும் மீட்டனர். அப்போது, ஸ்ரீதேவி, தனது மூத்த மகள் கனிஷ்காவின் கால்களை, தனது காலுடன் இறுக்கமாக கயிற்றால் கட்டிக்கொண்டு இருப்பது தெரியவந்தது.
இதை கண்டு, அப்பகுதி மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர், 3 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தர்மபுரி மாவட்ட எஸ்பி மகேஸ்வரன், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இது குறித்து வழக்குபதிவு செய்த பொம்மிடி போலீசார், ஸ்ரீதேவி தனது 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவர்கள் கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில், அவரது கணவர் தமிழரசன் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.