புதுடெல்லி: சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் வழக்கை விரைவாக முடிக்க கூடுதலாக போக்சோ சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, பி.பி.வராலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறுகையில்,குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் (போக்சோ) தொடர்பான வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.
இதனால், விசாரணைகளை முடிப்பதற்கு சட்டத்தின் படி குறிப்பிட்ட காலக்கெடுவை பின்பற்ற முடிவதில்லை. போக்சோ வழக்குகளின் விசாரணையுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போக்சோ வழக்குகளை முன்னுரிமை அடிப்படையில் விசாரிப்பதற்கும் சிறப்பு நீதிமன்றங்களை கூடுதலாக உருவாக்குவதற்கு ஒன்றிய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்து விசாரணைகளை முடிக்க வேண்டும் என்று கூறினர்.