Wednesday, September 27, 2023
Home » கருத்தடைக்கு வேண்டாம் மனத்தடை!

கருத்தடைக்கு வேண்டாம் மனத்தடை!

by Porselvi

நம் நாட்டின் பெரிய பலம் எது என்று கேட்டால் நம் மக்கள்தொகைதான். இவ்வளவு மனிதவளம் நிரம்பிய ஜனநாயக நாடு உலகிலேயே நாம் மட்டும்தான். மறுபுறம் இந்த அளவுக்கு அதிகமான மக்கள்தொகைதான் நமது துயரத்துக்கு எல்லாம் அடிப் படையாகவும் இருக்கிறது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது நாட்டுக்கு மட்டும் அல்ல வீட்டுக்கும் நல்லது. அதனால்தான் மத்திய அரசு பல தசமங்களாக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது பற்றிய விழிப்புணர்வுப் பிரசாரங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.  ஆனால், இத்தனை பிரசாரங்கள் செய்தும் கருத்தடை பற்றிய நம்முடைய புரிதல் என்பது கிட்டதட்ட ஜீரோ என்றுதான் சொல்ல வேண்டும். ‘எத்தனை வகையான கருத்தடை சாதனங்கள் உள்ளன?’ என்று நன்கு படித்தவர்களிடம் கேட்டால்கூட இரண்டு மூன்று முறைகளுக்கு மேல் யாருக்கும் தெரிவதில்லை. இந்த அறியாமைதான் நம்மை மிகப் பெரிய சிக்கலில் கொண்டுபோய் விட்டிருக்கிறது. கர்ப்பம் என்பது வரம்தான்.

ஆனால், அந்தக் கர்ப்பமே வேண்டாத நேரத்தில் நேர்ந்துவிட்டால் அதுதான் பெரிய சாபம். நம் நாட்டில் கருத்தடை சாதனங்கள் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவு மட்டும் இல்லை, அது குறித்து எண்ணற்ற தவறான நம்பிக்கைகள், கருத்துகளும் உள்ளன. சிலர் அதைப் பாவம் என நினைக்கிறார்கள். சிலர் அதை இன்பத்துக்கு இடைஞ்சல் என நினைக்கிறார்கள். கருத்தடை பற்றிய அறியாமையும் முன்யோசனையின்மையும் தவறான கற்பிதங்களுமே கருக்கலைப்பு போன்ற மகாபாவமான குற்றங்களைப் பெருக்குகிறது. நம் நாட்டில் கருவைக் கொல்லுதல் சிறைத் தண்டனை கிடைக்கும் அளவுக்குக் கொலைக்கு நிகரான குற்றம். ஆனால், கருத்தடை கருவிகள் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டிருக்கிறது. நம் மக்கள் பின்னதை விட்டுவிட்டு முன்னதைப் பின்பற்றுகிறார்கள். கருத்தடை சாதனங்கள் என்றால் என்ன? அவற்றில் எத்தனை வகைகள் உள்ளன. அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

கருத்தடை முறைகள்

பொதுவாக, கருத்தடை வழிமுறைகள், தற்காலிக முறைகள், நீண்டகால முறைகள், நிரந்தர முறைகள் என மூன்றுவகைப்படும். தற்காலிக முறைகளில் காண்டம் எனப்படும் உறை, கருத்தடை மாத்திரை, அவசரநிலை மாத்திரை, கருத்தடை பேட்ச், கருத்தடை வளைவுகள், ஸ்பெர்மசைட், டயாப்ரம், கேப், கருத்தடை ஊசி ஆகியவை அடங்கும். நீண்டகால முறைகளில் காப்பர் டி, கான்ட்ராசெப்டிவ் இம்பிளான்ட் ஆகியவையும் நிரந்தர முறையில் டியூப்பக்டமி, வாசக்டமி ஆகியவையும் அடங்கும். இதில் ஆணுறையும், வாசக்டமியும் ஆண்களுக்கானவை. மற்றவை பெண்களுக்கானவை.

தற்காலிக முறைகள்
காண்டம் எனப்படும் உறை

பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்த எளிய கருத்தடை சாதனம் இது. இதில் ஆணுறை, பெண்ணுறை என இரண்டு வகை உள்ளன. உடலுறவின்போது இதை அணிந்துகொண்டால், விந்து சினை முட்டையை அடைவதைத் தடுக்கலாம். இதன் மூலம் கர்ப்பம் தடுக்கப்படும். உறைகளுடன் சேர்த்து ‘ஸ்பெர்மிசைட்’ எனப் படும், விந்துகளைக் கொல்லும் மருந்துகளையும் பயன்படுத்துவது உண்டு. உடலின் வெளியே மட்டும் செயல்படுவதால் இது பாதுகாப்பானது. மேலும், உடலுறவினால் பரவும் நோய்களைத் தடுக்கக்கூடிய கருத்தடை சாதனம் காண்டம் என்பது குறிப்பிடத்தக்கது. உறை கிழிந்துபோதல், கழண்டுபோதல், ஓட்டை ஏற்படுதல் ஆகிய காரணங்களால் இந்த முறை தோல்வியடைய 20 சதவிகித வாய்ப்பு உள்ளது.

கருத்தடை மாத்திரை

இது பெண்களுக்கானது. இந்த மாத்திரை களில் புரோஜெட்ரான், ஈஸ்ட்ரோஜென் ரசாயனங்கள் இருக்கின்றன. இது, முட்டை வெளியேறுதலை (ஓவரேஷன்) தடுத்து, கருத்தரிப்பை தவிர்க்கிறது. இந்த மாத்திரைகளை மாதவிடாய் முடிந்த இரண்டாம் நாள் தொடங்கி 21 நாட்கள் உட்கொள்ள வேண்டும். இதனால், சினைமுட்டை வெளியே வராது. மியூக்கஸ் சுரப்பை அடர்த்தி படுத்தியும் இது கருத்தடை செய்யும். தினமும் குறித்த நேரத்தில் தவறாமல் உட்கொள்ள வேண்டும். இந்த மாத்திரையை ஏதேனும் ஒருநாள் எடுத்துக்கொள்ளாமல் தவறவிடுவது, நேரம் மாற்றிச் சாப்பிடுவது போன்ற காரணங்களால் இது தோல்வி அடைய ஒன்பது சதவிகித வாய்ப்பு உள்ளது. மேலும் இதனால் பெண்களுக்கு சில பக்கவிளைவுகளும் ஏற்படக்கூடும். எனவே, பயன்படுத்தும் முன் மருத்துவரிடம் கலந்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

அவசரநிலை மாத்திரை

இதுவும் பெண்களுக்கானதுதான். உடலுறவு முடிந்த 24 மணி நேரத்துக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். குறித்த நேரத்தில் எடுத்துக்கொண்டால்கூட இந்த மாத்திரை செயல்படாமல் போவதற்கு 52 சதவிகித வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதனை அடிக்கடி எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் ஏற்படும். எனவே, மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

கருத்தடை பேட்ச்

‘கான்ட்ராசெப்டிவ் பேட்ச் (Patch)’ எனப்படும் இந்த பேட்ச்களை முன்வயிறு, பின்புறம், முதுகு ஆகிய பகுதிகளில் பெண்கள் தங்கள் உடலில் ஒட்டிக்கொண்டால், சருமம் வழியாகக் கடத்தும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்ட்டிரான் ஹார்மோன்கள் சினைமுட்டை உருவாதலைத் தடுப்பதன் மூலம் கர்ப்பம் தடுக்கப்படும். மாத விலக்கின் முதல் நாளில் இருந்து சீரான இடைவெளியில் ஒட்டிக்கொள்ள வேண்டும். நம் நாட்டில் தற்போதுதான் ஓரளவு உபயோகத்தில் உள்ளது இந்த பேட்ச். இதில் தோல்வி ஏற்பட ஒன்பது சதவிகித வாய்ப்பு உள்ளது.

கருத்தடை வளைவுகள்

‘கான்ட்ராசெப்டிவ் ரிங்’ எனப்படும் இந்தக் கருத்தடை வளைவை மாதவிலக்கின் முதல்நாள் அன்று அணிந்துகொண்டால், அது வெளியிடும் ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்ட்டிரான் ஹார்மோன்கள் சினைமுட்டை வெளியாதலைத் தடுத்து, கர்ப்பத்தைத் தடுக்கும். தோல்வி அடைய ஒன்பது சதவிகித வாய்ப்பு உள்ள முறை இது.

ஸ்பெர்மிசைட்ஸ்

விந்தணுக்களை அழித்தும் நுரை போன்ற அமைப்பை உருவாக்கி விந்தணுக்களின் ஓட்டத்தைத் தடை செய்தும் கர்ப்பத்தடையை உருவாக்கும் ரசாயனப் பொருள் இது. பெண்ணின் பிறப்புறுப்பில் வைக்கக்கூடிய வகையில் ஜெல், கிரீம், மாத்திரை எனப் பல வடிவங்களில் வருகிறது. இதைத் தனியாகப் பயன்படுத்தும்போது 50 சதவிகிதத்துக்கு மேல் தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது. டயாப்ரம் அல்லது கேப் முறை உடன் பயன்படுத்தும்போது நல்ல பயன்தரும்.

டயாப்ரம் (Diaphragm)

கூடாரம் போன்ற முகப்பு உடைய ரப்பரால் ஆன பொருள். இது, வளைந்துகொடுக்கக்கூடியது. இதை உடலுறவு கொள்ளும் முன் பெண்கள் பொருத்திக்கொள்ள வேண்டும். பிறப்புறுக்குப் பின்புறம், பியூபிக் எலும்புப் பகுதியில் பொருத்த வேண்டும். மிகச்சரியாகப் பொருத்தினால் கர்ப்பப்பைவாய் திறக்காமல் போய்விடும். இதனால், கர்ப்பப்பைக்குள் விந்தணு செல்வது தடுக்கப் படும். உடலுறவுக்குப் பின் ஆறு மணி நேரத்தில் இதை அகற்றிவிட வேண்டும். தொடக்கத்தில் இந்த டையாப்ரத்தை மருத்துவர்தான் பொருத்துவார். நன்கு பழகிய பிறகு இதைப் பெண்கள் தாங்களாகவே பொருத்திக்கொள்ளலாம். இதைத் தனியாகப் பயன்படுத்தும்போது 50 சதவிகிதத்துக்கு மேல் தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது. ஸ்பெர்மிசைட்ஸ் உடன் பயன்படுத்தும்போது நல்ல பலன் கிடைக்கும்.

கேப்

இதுவும் ரப்பரால் ஆன பொருள்தான். உடலுறவுக்கு முன் கர்ப்பப்பைவாய்க்கும் பிறப்புறுப்புக்கும் இடையில் பொருத்த வேண்டும். இது, விந்தணுக்கள் பயணிப்பதைத் தடுக்கிறது. கிட்டத்தட்ட இதுவும் டயாப்ரம் போலத்தான். ஆனால், பல்வேறு அளவுகளில் வருகிறது. இதையும் தனியாகப் பயன்படுத்தும் போது 50 சதவிகிதத்துக்கு மேல் தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது. ஸ்பெர்மிசைட்ஸ் உடன் பயன்படுத்தலாம்.

கருத்தடை ஊசி

இதுவும் பெண்களுக்கானதுதான். மூன்று மாத இடைவெளியில் போட்டுக்கொள்ளும் கருத்தடை ஊசி இது. ப்ரோஜெஸ்ட்டோஜென் ஹார்மோனை வெளியிட்டு கருமுட்டை உருவாதலைத் தவிர்ப்பதோடு, பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பை அடர்த்தியாக்கி, விந்து கருப்பையை அடையாமலும் தடுக்கும். உலகம் முழுக்கப் பரவலாகப் பின்பற்றப்படும் முறை இது. 6 சதவிகிதம் தோல்வி அடைய வாய்ப்பு உள்ள கருத்தடை முறை இது. மேலும், சிலருக்கு இது பக்கவிளைவு களை ஏற்படுத்தலாம் என்பதால் மருத்துவரிடம் சென்று மட்டுமே போட்டுக்கொள்ள வேண்டும்.

நீண்டகால கருத்தடை

காப்பர் டி (Copper T) ஒரு நீண்டகால கருத்தடை சாதனம். மாதவிலக்கின் இறுதி நாளில், பெண்களின் பிறப்புறுப்பின் வழியாக மருத்து வரால் உள்ளே பொருத்தப்படும் கருத்தடை சாதனம் இது. இது பல்வேறு அளவுகளில் வருகிறது. அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை ஆயுள்கொண்டது. ஹார்மோன்கள் கொண்ட காப்பர் டி, பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பை அடர்த்தியாக்கி, விந்துக்கள் எண்டோமெட்ரியத்தை அடைவதைத் தவிர்க்கும், ஹார்மோன்கள் இல்லாத காப்பர் டி, காப்பர் அணுக்களைச் செலுத்தி விந்துக்களின் இயக்கத்தைத் தடுக்கும். மேலும், இதை, விரும்பும்போது அகற்றி, கருத்தரிக்கலாம். காப்பர் டி தோல்வி அடைய 1 சதவிகித வாய்ப்பு மட்டுமே உண்டு. ஆனால், இது சில பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

கான்ட்ராசெப்டிவ் இம்ப்ளான்ட்

கான்ட்ராசெப்டிவ் இம்ப்ளான்ட் எனப்படும் சிறிய குச்சி போன்ற கருத்தடை சாதனம், மருத்துவரால் பெண்களின் கைப்பகுதியில் செலுத்தப்படும். இது சினைமுட்டை வெளியேற்றத்தைத் தடுக்கும். மேலும், பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பின் அடர்த்தியை அதிகரித்து, விந்து உட்செல்வதையும் தடுக்கும் என்பதால் மிகவும் பாதுகாப்பான கருத்தடை சாதனம் இது. ஒருமுறை உட்செலுத்திக்கொண்டால், மூன்று வருடங்கள் முதல் அதிகபட்சமாக ஐந்து வருடங்கள் வரை கருத்தடை செய்யும். விரும்பினால் இதை அகற்றிக்கொண்டு கருத்தரிக்கலாம். ஒரு சதவிகிதம் மட்டுமே தோல்வி அடைய வாய்ப்பு உள்ள இம்ப்ளான்ட் சாதனம் இது. சிலருக்கு ஒவ்வாமையை
ஏற்படுத்தக்கூடும்.

நிரந்தர முறைகள் ட்யூபெக்டமி

இது ஒரு நிரந்தரமான கருத்தடுப்பு முறை. இதில் பெண்களின் பெலோப்பியன் குழாய் கத்தரிக்கப்பட்டு முடிச்சுப்போடப்படும். சிலருக்கு இந்தக் குழாயை அகற்றுவதும் உண்டு. முடிச்சிடும் முறையில் அறுவைசிகிச்சை செய்துகொண்டால் மீண்டும் குழந்தைபெற விரும்பினால் தடையை அகற்றி சரி செய்துகொள்ளலாம். ஆனால், கத்தரிக்கப்பட்டால் மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை. தற்போது லேப்ரோஸ்கோப்பி முறையில் எளிமையாக அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது.

வாசக்டமி

இது ஆண்களுக்கான கருத்தடை முறை. இதில், விதைப்பையில் இருந்து விந்து எடுத்துச் செல்லப்படும் பாதை அறுவைசிகிச்சை மூலம் அடைக்கப்படுகிறது. தற்போது, லேப்ரோஸ்கோப்பி மூலம் இந்த அறுவைசிகிச்சைகள் எளிமையாகச் செய்யப்படுகின்றன. மேலும், பெண்களுக்கான ட்யூபக்டமியைவிட ஆண்களுக்கான வாசக்டமி சிகிச்சை எளிமையானது.

– இளங்கோ கிருஷ்ணன்

கர்ப்பம் தடுக்க…

தவறான நாட்களில் இல்லறத்தில் ஈடுபடுவது கர்ப்பத்தைப் பட்டுக் கம்பளமிட்டு வரவேற்பதற்குச் சமம். அது என்ன தவறான நாட்கள் என்றால் அது ஓவலேஷன் பீரியட்தான். ஒரு பெண் உடலில் கருமுட்டை முதிர்ந்து வெளிப்படும் நாட்களைத்தான் ஓவலேஷன் என்று சொல்வார்கள். பெண் பூப்பெய்தியது முதல் அவளது உடலில் உள்ள கருமுட்டைகள் ஒவ்வொரு இருபத்தெட்டு நாட்களுக்கு ஒருமுறையும் முழு வளர்ச்சிபெற்று பெலோப்பியன் ட்யூப் வழியாக சினைப்பைக்கு வரும். இங்கு கருமுட்டைகள் வரும்போது பெலோப்பியன் ட்யூபில் ஆணின் விந்தணுக்கள் இருந்தால் அதனோடு கூடி கருவை உருவாக்கும். ஒரு பெண்ணுக்கு இருபத்தெட்டு நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு ஏற்பட்டால் அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று பொருள். இவர்களுக்கு ஓவலேஷன் காலம் என்பது மாதவிலக்கானதிலிருந்து பதினான்காம் நாளாக இருக்கும்.

இந்த நாளுக்கு இரண்டு நாட்கள் முன்னரும் அதாவது பன்னிரண்டாம் நாளும் இரண்டு நாட்கள் பின்னரும் அதாவது பதினாறாம் நாளும் இல்லறத்தில் ஈடுபட்டால் கண்டிப்பாக கருத்தரிக்க நேரிடும். சிலருக்கு பன்னிரண்டாம் நாள் முதல் பதினெட்டாம் நாள் வரை இதற்கான வாய்ப்பு இருக்கும். எனவே, கர்ப்பத்தைத் தவிர்க்க வேண்டும் என்றால் கண்டிப்பாக இந்த நாட்களில் உறவு வைக்காதீர்கள். சில பெண்களுக்கு மாதவிலக்கு சீராக இருக்காது. இப்படி இல்லாதவர்களுக்கு ஓவலேஷன் காலம் என்பது பதினான்காம் நாளுக்குப் பிறகாய் இருக்கும். உதாரணமாக ஒருவர் முப்பத்தொரு நாட்களுக்கு ஒருமுறை விலக்காகிறார் என்றால், அவரின் ஓவலேஷன் கால கட்டம் 31-14=17 என பதினேழாம் நாளாக இருக்கும். இந்த நாளுக்கு இரு நாட்கள் முன்னரும் இரு நாட்கள் பின்னரும் உறவு கொள்வதைத் தவிர்த்தால் கர்ப்பத்தைத் தவிர்க்கலாம்.

எந்த நிலையில் உறவு வைத்தால் கர்ப்பம் தவிர்க்கலாம் என்று சிலர் கேட்பார்கள். உண்மையில் அப்படி எந்த நிலையையும் மருத்துவ விஞ்ஞானம் பரிந்துரைப்பதில்லை. பொதுவாக, ஆண் பெண் கூடும் மிஷனரி பொஷிசனில் கருத்தரிக்க வாய்ப்புண்டு என்று பாலியல் மருத்துவர்கள் சொல்கிறார்கள். எனவே, அதைத் தவிர்த்து பிற நிலைகளை முயலலாம். ஆனால், அப்போதும் ஓவலேஷன் பீரியட்டின் போது கவனமாக இருக்க வேண்டும். ரிஸ்க் வேண்டாம்.

கர்ப்பம் சில தகவல்கள்

கர்ப்பம் அடைவதற்கு வயது ஒரு முக்கியக் காரணம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். கர்ப்பம் அடைவதற்கு பெண்களுக்கு 22-24 வயது என்பது மிகவும் உகந்த காலகட்டம் என்கிறார்கள். பொதுவாக, பெண்களுக்கு முப்பது வயதுக்குப் பிறகும் ஆண்களுக்கு நாற்பது வயதுக்குப் பிறகும் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு படிபடியாகக் குறைந்துகொண்டே செல்லும். ஆனால், இது ஒரு பொதுவான கருத்துதான். முழு உண்மை இல்லை. முப்பது வயதில் எழுபத்தைந்து சதவீதப் பெண்கள் உறவுகொள்ளத் தொடங்கிய ஒரு வருடத்தில் கர்ப்பமாகிறார்கள். தொண்ணூறு சதவீதப் பெண்கள் நான்கு வருடங்களில் கர்ப்பமடைகிறார்கள். அதுவே, நாற்பது வயதில் நாற்பத்தி நாலு சதவீதப் பெண்கள்தான் ஒரு வருடத்தில் கர்ப்பமடைகிறார்கள். அதுபோலவே, அறுபத்தி நாலு சதவீதம்தான் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் கருத்தரிக்கிறார்கள் என ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. வயது அதிகரிக்க அதிகரிக்க கர்ப்பத்துக்கான வாய்ப்பு குறையும் என்பதற்கு இது ஒரு சான்று.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?