பரமத்திவேலூர்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதி, 4 வயது பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தாய் மற்றும் உடந்தையாக இருந்த உறவினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்துள்ள காந்திபுரத்தை சேர்ந்தவர் முத்தையா (24), கூலி தொழிலாளி. இவரது மனைவி சினேகா (22). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, பூவரசி(4) என்ற பெண் குழந்தை இருந்தது. இதனிடையே, சரத்(21) என்பவருடன், சினேகாவுக்கு தகாத உறவு ஏற்பட்டது. இதையறிந்த முத்தையா, மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்துடன் சினேகா, சரத் இருவரும் குழந்தையுடன் நாமக்கல் வந்துள்ளனர். அவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தினர் மறுத்து விட்டனர். இதனால், சினேகா மகளுடன், பரமத்திவேலூரை அடுத்துள்ள சேலூர் செல்லப்பம்பாளையத்தில் உள்ள தனது பெரியப்பா மகள் கோகிலா வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் மதியம், தனது தகாத உறவுக்கு இடையூறாக இருப்பதாக கருதி, குழந்தை பூவரசியை கிணற்றில் தூக்கி வீசி சினேகா கொலை செய்தார். அப்போது, கோகிலாவும் உடன் இருந்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில், இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசாரிடம் சினேகா கூறுகையில், முறைப்படி விவாகரத்து பெற்று வந்தால், தன்னை திருமணம் செய்து கொள்வதாக சரத் கூறியதாகவும், தனது உறவுக்கு தடையாக இருந்ததால், குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததாகவும் கூறினார். இதனையடுத்து குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த சினேகா, உடந்தையாக இருந்த கோகிலா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, நேற்று பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிபதியின் உத்தரவின் பேரில், இருவரும் சேலம் மத்திய பெண்கள் சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர். இதனிடைய, கொலை செய்யப்பட்ட குழந்தையின் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது தந்தையின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.