தாம்பரம்: சிட்லபாக்கம், முத்துலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (48), கார்ட்டூன் டிசைனர். இவரது மனைவி ஜெயலட்சுமி (40). 2 வயதில் யாழினி, யாயினி என இரட்டை குழந்தைகள். குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிய கருப்பசாமி, வெளியே செல்வதற்காக காரை ரிவர்சில் எடுத்துள்ளார். அப்போது குழந்தை யாழினி காரின் முன்பக்கமாக நின்றுள்ளது.
மற்றொரு குழந்தை யாயினி காரின் பின்புறம் சென்றுள்ளது. காரை ரிவர்ஸ் எடுத்த கருப்பசாமி, காரின் பின்னால் நின்ற யாயினி மீது மோதியுள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உதவியுடன், குழந்தையை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த யாயினி நேற்று உயிரிழந்தார்.