சேலம்: ஈரோட்டில் இருந்து ஆண் குழந்தையை ரூ.4 லட்சத்திற்கு வாங்கி வந்து, சேலத்தில் ரூ.7 லட்சத்திற்கு விற்பனை செய்த தம்பதி உள்பட 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சேலம் நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (44). இவர் குகை பகுதியில் உள்ள பைனான்ஸ் கம்பெனியில் பணம் வசூலிக்கும் வேலை செய்து வந்தார். திடீரென வேலையில் இருந்து நின்று விடுவதாக உரிமையாளரிடம் கூறியுள்ளார். இந்நிலையில், வசூலித்த தொகையை ஏமாற்றி விட்டதாக கூறி பைனான்ஸ் கம்பெனி உரிமையாளர் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், வசூலித்த தொகை ₹5 லட்சத்தை கொடுக்கும்படி கூறியுள்ளனர்.
இதுபற்றி மோகன்ராஜ், போலீஸ் கமிஷனர், கலெக்டரிடம் கொடுத்த புகாரில், நான் வசூலிக்காத பணத்தை வசூலித்ததாகவும், இந்த தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என எழுதி வாங்கியதுடன், காசோலையிலும் கையெழுத்து பெற்றுக்கொண்டு மிரட்டுவதாக உரிமையாளர் உள்பட 3 பேர் மீது குற்றம் சாட்டியுள்ளார். இப்புகார் குறித்து விசாரித்தபோது, திடீர் திருப்பமாக மோகன்ராஜ், அவரது மனைவி நாகசுதா ஆகியோர் குழந்தை விற்பனை கடத்தல் கும்பலுடன் சேர்ந்து செயல்பட்டது தெரியவந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஈரோட்டை சேர்ந்த பெண்ணிடம் இருந்து ஆண் குழந்தை ஒன்றை மோகன்ராஜ், நாகசுதா மற்றும் கூட்டாளிகளான குமாரபாளையம் ஸ்ரீதேவி, ஈரோடு பர்வீன், பத்மாவதி, ஜனார்த்தனம் ஆகியோர், தாய்க்கு ரூ.4 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளனர். அந்த குழந்தையை சேலத்தை சேர்ந்த குழந்தையில்லாத தம்பதியிடம் ரூ.7 லட்சத்திற்கு விற்றுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து குழந்தையை போலீசார் மீட்டனர். விற்பனை செய்த தாய், வாங்கிய வளர்ப்பு தாயிடம் விசாரணை நடக்கிறது.
இதுகுறித்து டவுன் உதவி கமிஷனர் ஹரிசங்கரி கூறுகையில், குழந்தை விற்பனை கும்பலை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே வழக்குகளும் இருக்கிறது’ என்றார்.
ஒரு பெண் குழந்தை விற்பனை தடுப்பு
சேலம் பனைமரத்துப்பட்டியை சேர்ந்த சித்ரா என்ற பெண், ஈரோட்டை சேர்ந்த பாலு என்பவருடன் சேர்ந்து பெண் குழந்தையை விற்பனை செய்ய இந்த கும்பலுடன் சேர்ந்து ஏற்பாடு செய்துள்ளார். இதையடுத்து சித்ரா, பாலு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.3லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், கைது செய்யப்பட்ட இவர்கள் ஒவ்வொருவரும் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு வைத்துக்கொண்டு, வறுமையில் இருப்போரை கண்டறிந்து அவர்களிடம் பணத்தாசை காட்டி குழந்தைகளை வாங்கி, அதிக பணம் தருபவர்களிடம் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. ஏற்கனவே மீட்கப்பட்ட குழந்தையின் தாய் மிகவும் ஏழ்மையானவர். அவரது கணவர் இறந்த நிலையில், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட தாய், மற்றும் 4 வயது பெண் குழந்தை இருக்கும் நிலையில்தான் அவருக்கு நெருக்கடி ஏற்படுத்தி ரூ.4லட்சத்தை கொடுத்து வாங்கி விற்பனை செய்துள்ளனர்’ என்றனர்.