*கலெக்டர், எம்பி மற்றும் எம்எல்ஏ பங்கேற்பு
திருவாரூர் : திருவாரூரில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் மோகனசந்திரன், எம்.பி செல்வராஜ் மற்றும் எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் குறித்த விழிப்புணர்வு பேரணியினை புதிய ரயில் நிலையத்திலிருந்து கலெக்டர் மோகனச்சந்திரன், நாகை எம் பி செல்வராஜ் மற்றும் எம் எல் ஏ பூண்டிகலைவாணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
பின்னர் கலெக்டர் மோகனசந்திரன் கூறியதாவது, பொதுவாக குழந்தைகளில் ஒரு பிரிவினர் ஊதியம் பெற்றோ அல்லது ஊதியம் பெறாமலோ உழைப்பில் பங்கெடுத்தல் என்ற முறையே குழந்தைத் தொழிலாளர் என வரையறுக்கப்பட்டுள்ளது.
குழந்தை தொழிலாளர் என்பவர் 6 வயதிலிருந்து 14 வயது வரை பகல் வேலையில் பள்ளிக்கு செல்லாமல் உழைக்கும் குழந்தைகள் ஆவர். ஒரு குழந்தை வருவாய் பெறுவதற்காக பல்வேறு வகையான செயல்களில் ஈடுபடுத்தப்படலாம்.
தானாகவோ அல்லது கட்டாயப்படுத்தப்பட்டோ குழந்தைகள் வேலைகளில் அமர்த்தப்படலாம். அமைப்பு சார்ந்த தொழிலிலோ, அமைப்பு சாராத தொழிலிலோ ஈடுபடுத்தப்படலாம். கட்டுமான தொழில், கம்பளம் நெய்தல், தீப்பெட்டித் தொழிற்சாலை, பட்டாசு தொழிற்சாலை, பீடி சுற்றுதல், செங்கல் சூளையில் வேலை செய்தல், பிச்சையெடுத்தல் போன்றைவை குழந்தை தொழிலுக்கான களங்கள் ஆகும்.
குழந்தைத் தொழிலுக்கான காரணங்களானவை ஏழ்மை, பெற்றோர்களின் பொறுப்பின்மை, குடும்ப குல தொழில் நடத்துவதற்கு சிறுவயதில் கட்டாயப்படுத்துதல் ஆகும். குழந்தை தொழிலுக்கு எதிராக அரசின் நடவடிக்கைகளாக கடுமையான சட்டங்கள் மூலம் தொழிலாளர்கள் உருவாவதை தடுப்பதில் அரசு முக்கிய பங்காற்றுகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் 24வது பிரிவின்படி 14 வயதிற்கு கீழ் உள்ள எந்த குழந்தையும் தொழிற்சாலை மற்றும் சுரங்கம் அல்லது ஆபத்தான வேலைகளில் அமர்த்தக்கூடாது என்பதை கடுமையான சட்டங்கள் மூலம் கட்டாயப்படுத்தப்படுகிறது.
2006 அக்டோபர் 10ம் நாள் முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வீட்டு வேலையாட்களாகவோ அல்லது தேனீர் கடைகளிலோ மற்றும் சாலையோர உணவக வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதை இச்சட்டத்திருத்தம் தடைசெய்துள்ளது.
எனவே பொதுமக்கள் குழந்தைத் தொழிலாளர் பற்றி தகவல் தெரிவிக்க கலெக்டர் அலுவலகம், காவல்துறை, மாவட்ட தொழிலாளர் நல அலுவலகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் குழந்தைகளுக்கான 24 மணி நேர இலவச அவசர தொலை பேசி எண்ணான 1098 யை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
இப்பேரணியானது ரயில் நிலையத்திலிருந்து துவங்கி பழைய பேருந்து நிலையம், பனகல்ரோடு, தெற்கு வீதி வழியாக வ.சோ. ஆண்கள் மேல்நிலை பள்ளியினை சென்றடைந்தது. இப்பேரணியில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் குறித்த உறுதிமொழியினை அனைத்துதுறை அரசு உயர்அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
மேலும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் -கையெழுத்து இயக்கத்தினை கலெக்டர் மோகனசந்திரன் துவக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் எஸ் பி கருண்கரட், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராசன், நகராட்சி தலைவர் புவனபிரியா செந்தில், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மாணிக்கம், முதன்மை கல்வி அலுவலர் சௌந்தர்ராஜன், நன்னடத்தை அலுவலர் வெங்கட்ராமன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் வெங்கடேசன், பணி நியமனக்குழு உறுப்பினர் பிரகாஷ், தாசில்தார் சரவணன், குழந்தைகள் நலக்குழுத்தலைவர் பாலம்பிகை உட்பட பலர் கலந்துகொண்டனர்.