திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடி பூண்டி அடுத்த குருபராஜ கண்டிகை கிராமத்தை சேர்ந்த தம்பதி அரிகிருஷ்ணன் மற்றும் அமுலு. குறவர் இனத்தை சேர்ந்த இவர்களின் 3 வயது பெண் குழந்தை வெங்கட லட்சுமி மேகலா. ஏற்கனவே 2 நாட்களாக உடல் நல குறைவு ஏற்பட ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற குழந்தைக்கு டீயில் பிஸ்கட்டை துவைத்து சாப்பிட்ட போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. கவரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இருசக்கர வாகனத்திலேயே குழந்தையை தூக்கி கொண்டு பதறி அடித்தபடி சென்றனர்.
பின்பு மேல்சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே குழந்தை உயிரிழந்துவிட்டதாக பெற்றோரிடம் தெரிவித்தனர். பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் குழந்தைக்கு உடற்கூராய்வு செய்ய வேண்டும் என கூறியதை அடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உடற்கூராய்வு நடத்தப்பட்டு பெற்றோரிடம் குழந்தை உடல் கொடுக்கப்பட்டது. உயிரிழந்த குழந்தைக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் மூச்சுத்திணறலே குழந்தை உயிரிழப்புக்கு காரணம் என தெரிவித்தனர்.