பாகல்கோட்டை: கர்நாடகாவின் பாகல்கோட்டை மாவட்டம் தேரதாலா கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி. தனியார் வங்கி ஊழியர். இவரது 2 வயது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டது. பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உடல் நலம் சரியாகவில்லை. இந்நிலையில் தோழி ஒருவர் மூலம் மராட்டிய மாநிலம் கொல்லாபுராவை சேர்ந்த சீமா சாம்பவி என்ற பெண் சாமியாரின் அறிமுகம் லட்சுமிக்கு கிடைத்தது. அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது, ‘உங்கள் மகளுக்கு பேய் பிடித்துள்ளது. அதற்கு சிறப்பு பூஜை செய்ய வேண்டும். பல லட்சம் ரூபாய் செலவாகும்’ என்று லட்சுமியிடம் சீமா சாம்பவி கூறியுள்ளார்.
அதற்கு லட்சுமி சம்மதித்துள்ளார். அதன்படி சீமா சாம்பவி, தனது வீட்டில் வைத்து குழந்தையின் பெயரில் சிறப்பு பூஜை செய்தார். பின்னர் அந்த வீடியோவை லட்சுமிக்கு அனுப்பி வைத்து பணம் வழங்கும்படி கூறினார். உடனே ஆன்லைன் மூலம் ரூ.28 லட்சம் அனுப்பி வைத்தார். ஆனால் பல நாட்களாகியும் குழந்தைக்கு உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. சந்தேகமடைந்த லட்சுமி, சீமா சாம்பவியை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது செல்போன் ‘சுவிட்ச்-ஆப்’ என வந்தது. அப்போதுதான் பேய் ஓட்டுவதாக கூறி ரூ.28 லட்சத்தை மோசடி செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பாகல்கோட்டை போலீசில் லட்சுமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி பெண் சாமியாரை வலைவீசி தேடி வருகிறார்கள்.