சென்னை: ஐகோர்ட் உத்தரவை அடுத்து கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு விஜயஸ்ரீ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணை தேடி தனுஷ் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாததால், தனுஷின் சகோதரரை கடத்திச் சென்று, பின்னர் இரவு பேருந்து நிறுத்தம் ஒன்றில் இறக்கி விட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் ஏடிஜிபி ஜெயராமன் நேற்று நீதிமன்ற வளாகத்தில் வைத்தே கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனிடம் திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்தில் விடிய விடிய விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏடிஜிபி ஜெயராமனை சஸ்பெண்ட் செய்ய காவல்துறை பரிந்துரைத்திருந்த நிலையில் இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராமன் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.