சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நேற்று சென்னை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு துறைகளின் சார்பில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள், நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஆய்வு செய்தார். அதன்படி, நீர்வளத்துறையின் சார்பில் முதற்கட்டமாக ரூ.100 கோடியில் போரூர் ஏரியில் வெள்ளப்பாதிப்பு ஏற்படாமல் தடுக்க 2022-23ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது 2ம் கட்டமாக, ரூ.84.93 கோடியில் மணப்பாக்கம் கால்வாய், கொளப்பாக்கம் கால்வாய் மற்றும் கெருகம்பாக்கம் கால்வாயில் வெள்ளத்தடுப்புப் பணிகள் நடந்து வருகிறது.
ஆலந்தூர் மண்டலம், மணப்பாக்கம் அருகில் உள்ள அடையாறு ஆற்றில் ரூ.24.80 கோடியில் மியாட் பாலம் முதல் விமான நிலையம் வரை மேற்கொள்ளப்பட்டு வரும் கரையை பலப்படுத்துதல், வெள்ளத்தடுப்பு சுவர் கட்டும் பணி, மழைநீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியை ஆய்வு செய்து, வடகிழக்கு பருவ மழைக்கு முன் விரைந்து பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது, தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏ எஸ்.அரவிந்த் ரமேஷ், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் செயலர் எஸ்.விஜயகுமார், நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் செல்வராஜ், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், செங்கல்பட்டு கலெக்டர் எஸ்.அருண்ராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.