Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

கருணை அடிப்படையில் வேலை தொடர்பான வழக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் தலைமை செயலாளர் ஆஜராக வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பணியின் போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக கால நிர்ணயம் செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் எனவும், கருணை அடிப்படையில் வேலை கோருவோரின் மாநில அளவிலான பட்டியலை தயாரிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதா என்று ஆய்வு செய்து மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கவும் கடந்த 2023 செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரிய வழக்கு, நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, 2023ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. 2023ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எந்த குழுவும் அமைக்கப்படவில்லை. அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, 2023 செப்டம்பர் முதல் இதுவரை தமிழகத்தில் தலைமைச் செயலாளர்களாக பதவி வகித்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு, நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக கால நிர்ணயம் செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் எனவும், கருணை அடிப்படையில் வேலை கோருவோரின் மாநில அளவிலான பட்டியல் தயாரிப்பது தொடர்பாக கடந்த ஜூன் 11ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பின்புதான், குழு அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, 2023 செப்டம்பர் முதல் இதுவரை தலைமைச் செயலாளர்களாக பதவி வகித்தவர்கள், ஜூலை 21ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்.