இந்திய அளவில் பட்டாசு அல்லது தீப்பெட்டி தொழில் என்றாலே சிவகாசியும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுமே நினைவுக்கு வரும். இந்தியாவில் முதன்முறையாக கொல்கத்தாவில் தீப்பெட்டி ஆலை தொடங்கப்பட்டாலும், சிவகாசியே பின்னர் அதன் உற்பத்திக் கூடமாக மாறியது. 1923ம் ஆண்டில் சிவகாசியில் முதன்முதலாக தீப்பெட்டி தொழிற்சாலை தொடங்கப்பட்டு, இன்று வரை அங்கு தீப்பெட்டி மற்றும் பட்டாசுகள் உற்பத்தி கொடிகட்டி பறக்கின்றன.
ஒளிவீசும் தீக்குச்சிகளையும், பட்டாசுகளையும் உற்பத்தி செய்யும் அந்த தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி உள்ளதா என்றால், இல்லை என்பதே பதிலாக இருந்தது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகே அத்தொழிலாளர்களின் வாழ்க்கை மறுமலர்ச்சியை நோக்கி பயணிக்க தொடங்கியது. கையினால் செய்யப்படும் தீப்பெட்டி மீதான 8 சதவீத வரியை ரத்து செய்து, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை தடுத்தது திமுக அரசுதான்.
தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வதாரத்தை காப்பாற்ற, நாடாளுமன்றத்தில் திமுக குரல் கொடுத்ததால், சீன லைட்டர்களின் இறக்குமதி தடுக்கப்பட்டது. தீப்பெட்டி மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய குரல் கொடுத்ததும் திராவிட மாடல் ஆட்சிதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பட்டாசு தொழில் வளர்ச்சிக்கும் திமுக ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் 2 நாள் விருதுநகருக்கு களஆய்வு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், பட்டாசு தொழிலாளர்களுடன் பேசி, அவர்கள் குறைகளை கேட்டறிந்துள்ளார். பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சென்று பட்டாசுகள் தயாரிப்பதற்கு ரசாயன பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் அறை, தயாரிக்கப்படும் இடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளார்.
பட்டாசு தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களிடம் வார விடுமுறை, பணியில் சந்திக்கும் சிக்கல்கள் ஆகியவற்றை கேட்டறிந்தார். அரசின் மகளிர் உரிமை தொகை உங்களுக்கு கிடைக்கிறதா என்பதையும் வாஞ்சையோடு கேட்டுள்ளார். பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் முறையான காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் என்கிற பாரதிதாசன் வாக்கிற்கேற்ப, தொழிலாளர்கள் மீது முதல்வரின் அக்கறையை விருதுநகர் விசிட் வெளிப்படுத்துவதாக அமைந்தது.
இதுமட்டுமா, தொடர்ந்து முதல்வர் விருதுநகரில் பேசியபோது ‘‘பட்டாசு தொழிலாளர்களின் ேகாரிக்கையை ஏற்று, பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியாகும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவை அரசே ஏற்கும். இதனை மாவட்ட அளவில் உறுதி செய்ய கலெக்டர் தலைமையில் நிதியம் உருவாக்கப்படும். இதற்கென அரசு சார்பில் ₹5 ேகாடி நிதியத்திற்கு வழங்கப்படும்’’ என பட்டாசு தொழிலாளர்கள் மனம் குளிரும் வகையில் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
முதல்வரின் அறிவிப்பால் பட்டாசு, தீப்பெட்டி ஆலை தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பட்டாசு ஆலைக்கு முதல்வர் வந்து ஆய்வு செய்ததால், பட்டாசு தொழிலுக்கு விடிவு காலம் பிறந்துவிட்டதாக உரிமையாளர்களும் கொண்டாடி மகிழ்கின்றனர். சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபடுதலை காரணம் காட்டி பட்டாசு தொழிற்சாலைகள் சில இடங்களில் மூடப்பட்டு வரும் சூழலில், அத்தொழிலை காக்கவும், அதில் ஈடுபடும் லட்சக்கணக்கான தொழிலாளர்களை காப்பாற்றவும் முதல்வர் எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை.