கோபி: திஷா கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை சென்ற முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், நேற்று காலை கோபி திரும்பினார். குள்ளம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் தினகரன் நிருபரிடம் அவர் கூறியதாவது: கொப்பரை தேங்காய் விலை குறைவாக உள்ளது. அதற்கு மானியம் வழங்க வேண்டும். விவசாயிகள், தேங்காய் பருப்பை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொடுத்தால் தனியாரை விட கூடுதல் விலை வழங்க வேண்டும் என கடந்த முறை நடைபெற்ற திஷா கமிட்டி கூட்டத்தில் கோரிக்கை விடுத்திருந்தேன். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும், கோபியில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும், காட்டு பன்றிகள் தொல்லை இருப்பதால், அவற்றை சுட்டுக்கொல்ல அனுமதி வழங்க வேண்டும். ஆதிதிராவிட மக்கள் தொகுப்பு வீடுகள், பசுமை வீடுகள் கட்டுவதற்கு கூடுதலாக நிதி வேண்டும் என்று கேட்டபோது செய்து தருவதாக முதல்வர் தெரிவித்தார். திஷா கூட்டத்தில் தொடர்ந்து நான் கலந்துகொண்டு தான் இருக்கிறேன். தற்போது உள்ள சூழ்நிலையில் அதை வேறு மாதிரியாக சிலர் பேசுகிறார்கள். எப்போதும் எனக்கு கொடுத்த பொறுப்பை சரியான முறையில் மக்களுக்கு பயன்படுத்துவேன். இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
* பாஜவுடன் அதிமுக கூட்டணியா?
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த செங்கோட்டையன் அளித்த பேட்டியில், பாஜவுடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என ஓபிஎஸ் பேசி இருப்பது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். கட்சியின் மூத்த தலைவர் என்றால் எல்லா கருத்தையும் பேசி விட முடியாது. அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்பதெல்லாம் இல்லை. அமைதியாக அவர் அவர் வேலையை பார்த்து கொண்டிருந்தால் நல்லது. நான் சாதாரண தொண்டன். என்னிடம் கேட்கும் கேள்விகளை பொதுச்செயலாளரிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.