சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 இளம் வல்லுநர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் பல முக்கிய மற்றும் முன்னுரிமை திட்டங்களை செயல்படுத்துவதில் பல்வேறு தொழில் மற்றும் கல்வி பின்புலத்தைச் சார்ந்த இளம் வல்லுநர்களின் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம் (2022 – 24) அறிவிக்கப்பட்டு திருச்சியில் உள்ள பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தை கல்விப் பங்காளராக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 30 இளம் வல்லுநர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் 11 பேர் பல்வேறு உயர் பணி வாய்ப்புகள் கிடைத்து சென்ற நிலையில், இரண்டு வருடங்களை பூர்த்தி செய்த 19 பேருக்கு “பொதுக் கொள்கை மற்றும் மேலாண்மையில்” முதுகலை சான்றிதழ்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் 25ம் தேதி வழங்கினார். இதை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம் 2024-26ல் செயல்படுத்த 25 இளம் வல்லுநர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, முதற்கட்ட தேர்வு (கணினி அடிப்படையிலானது), விரிவான தேர்வு (எழுத்துத் தேர்வு) மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டன. அந்த தேர்வில் 5,327 பேர் பங்கேற்றனர். அதிலிருந்து நேர்முக தேர்விற்காக 177 பேரை தேர்வு செய்து அவர்களுக்கான நேர்முகத் தேர்வு நடந்தது.
அதில், தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம் 2024-26ன் கீழ் இறுதியாக தேர்வு செய்யப்பட்ட 25 இளம் வல்லுநர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்வு செய்யப்பட்டுள்ள 25 இளம் வல்லுநர்களுக்கு, அரசின் உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு 30 நாட்கள் வகுப்பறை பயிற்சியும் மற்றும் மாவட்டங்களில் துறைரீதியான பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. அதன் பிறகு 25 இளம் வல்லுநர்களும் அரசின் பல்வேறு துறைகளின் அரசின் திட்டங்களில் 2 ஆண்டுகள் இணைந்து செயல்படுவர். பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம் மூலமாக பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு பயிற்சி வழங்கப்படும். திராவிட மாடல் அரசின் இந்த மதிப்புமிக்க முயற்சியின் மூலம் நீங்கள் ஒவ்வொருவரும் கற்று முன்னேறி வெற்றிபெற வாழ்த்துகிறேன். இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.