சென்னை: நாட்டிற்கே முன்னோடியான திட்டங்களை திராவிடமாடலில் செயல்படுத்தி தமிழ்நாட்டைத் தலை நிமிர்த்தி வருகிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். தாயாகக் கருணையையும் மனைவியாக உறுதுணையையும் மகளாகப் பேரன்பையும் பொழியும் மகளிர்க்குத் தாயுமானவராகத் தமிழக அரசு தொடர்ந்து செயல்படும். காலை உணவுத் திட்டம் மாணவர்களின் வருகையை உயர்த்தி, கற்றல் திறனை மேம்படுத்துகிறது. இப்போது கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தால் உழைக்கும் மகளிரின் சிரமத்தைச் சற்று போக்கியிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைதொகை திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதன்படி, 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் இந்த திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்து, 13 பேருக்கு ஏடிஎம் அட்டைகளை வழங்கினார் முதலமைச்சர். தகுதியான பயனாளிகலில் சிலருக்கு முன்கூட்டியே வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 1.06 விண்ணப்பங்கள் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது. இரண்டு கட்டமாக முகாம்கள், சிறப்பு முகாம்கள் மூலம் தமிழகம் முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மகளிருக்கு தொகையை கையாளுவது குறித்து கையேடு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.