சேலம்: மேட்டூர் அணை திறப்பு மற்றும் ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூன் 11ம் தேதி சேலம் வருகிறார். சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வரும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து, சேலம் இரும்பாலை ரோட்டில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளும் முதல்வர், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 1 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பேசுகிறார்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன்படி, இவ்விழாவிற்கான பந்தல் அமைக்கும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜேந்திரன் கூறியதாவது: காவிரி ெடல்டா பாசன விவசாயிகளின் வசதிக்காக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார். இதற்காக விமானம் மூலம் 11ம் தேதி சேலம் வருகிறார். தொடர்ந்து ஓமலூரில் இருந்து மேட்டூர் வரை ரோடு ஷோ முறையில், மக்களை சந்தித்து வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார். அன்றிரவு மேட்டூரில் தங்கும் முதல்வர், ஜூன் 12ம் தேதி காலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கிறார்.
அங்கிருந்து சேலம் வரும் முதல்வர், அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்று சுமார் ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இவ்விழாவில் மட்டும் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் பொதுமக்களுக்கான நலத்திட்டம், ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்கிறார். பயனாளிகள், பொதுமக்கள் என லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.