சென்னை: மேட்டூர் அணையிலிருந்து நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, 1,30,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை எழிலகத்திலுள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வளாகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வருகை புரிந்து, வெள்ள நிலைமை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், வெள்ள நிலைமை குறித்து முதல்வரிடம் எடுத்துக் கூறினார். இதையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினை சார்ந்த 470 வீரர்கள் நீலகிரி, கோவை, திண்டுக்கல், மயிலாடுதுறை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் முன் கூட்டியே நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக கொண்டு வந்து 26 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 4 மாவட்டங்களில் உள்ள இந்த 26 முகாம்களில் 596 குடும்பங்களைச் சேர்ந்த 1621 ேபர்தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், நகராட்சி துவக்கப்பள்ளி நிவாரண முகாம் மற்றும் நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் வட்டம், செங்குந்தர் திருமண மண்டப நிவாரண முகாம் ஆகிய நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசி, அவர்களுக்கு அங்கு போதுமான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்று முதல்வர் கேட்டறிந்தார். அப்போது முகாம்களில் தங்கியுள்ள மக்கள், தங்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் முகாம்களில் செய்து தரப்பட்டுள்ளது என்றும், அதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். இத்துடன் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா, நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோரிடம் முதல்வர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வின் போது அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, பேரிடர் மேலாண்மை இயக்குநர் மோகனசந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.