சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மொத்தம் ரூ.118.33 கோடி மதிப்பில் 3 மூத்த குடிமக்கள் உறைவிடங்களுக்கு அடிக்கல் நாட்டி, மேம்படுத்தப்பட்ட ஜெனரல் குமாரமங்கலம் குளம் மற்றும் பூங்கா, மேம்படுத்தப்பட்ட தணிகாச்சலம் நகர் கால்வாய் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ராஜாஜி நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் கொளத்தூர், பழனி மற்றும் பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் கட்டப்படவுள்ள மூன்று மூத்த குடிமக்களுக்கான உறைவிடங்களின் கட்டுமான பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அதன்படி, தேவி பாலியம்மன் திருக்கோயில் மற்றும் இளங்காளியம்மன் திருக்கோயில் சார்பில் ரூ.8.88 கோடி மதிப்பீட்டில் கொளத்தூரில் 27,525 சதுரடி கட்டிட பரப்பளவில் 75 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையிலும், திண்டுக்கல் மாவட்டம், பழனி, தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் ரூ.8.48 கோடி மதிப்பீட்டில் பழனியில் 100 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையிலும், திருநெல்வேலி மாவட்டம், நெல்லையப்பர் திருக்கோயில் சார்பில் ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் பாளையங்கோட்டையில் 50 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையிலும் மூத்த குடிமக்களுக்கான உறைவிடங்களின் கட்டுமான பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, ஜி.கே.எம். காலனி பிரதான சாலை, அரிச்சந்திரா மைதானத்தில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த 350 மாணவ, மாணவிகளுக்கு தையல் இயந்திரங்கள், 131 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் 100 பயனாளிகளுக்கு கண்ணாடிகளை வழங்கினார். தொடர்ந்து, ஜி.கே.எம். காலனி 24A தெருவில், சென்னை பெருநகர வளர்ச்சி திட்ட நிதியின் கீழ் ரூ.2 கோடியே 89 லட்சத்து 40 ஆயிரம் செலவில் ஜெனரல் குமாரமங்கலம் குளத்தினை ஆழப்படுத்தி, புதிதாக குளக்கரை, நடைபாதை, சுற்றுச்சுவர் மற்றும் சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூ.1 கோடியே 47 லட்சம் செலவில் இறகுப்பந்தாட்ட விளையாட்டுத்திடல், யோகா மேடை, செயற்கை நீரருவி, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்களுடன் மேம்படுத்தப்பட்ட ஜெனரல் குமாரமங்கலம் குளம் மற்றும் பூங்காவினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, பெரியார் நகர் 4வது தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 150 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 47 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களை முதல்வர் வழங்கினார். கொளத்தூர் தொகுதியில் உள்ள குமரன் நகர் 80 அடி சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பருவமழை காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க கொளத்தூர் மற்றும் மாதவரம் வட்டத்தில் அமைந்துள்ள தணிகாச்சலம் நகர் உபரிநீர் கால்வாயினை ரூ.91 கோடியே 36 லட்சம் செலவில் முடிவுற்ற திறந்தவெளி கால்வாய் மற்றும் மூடிய வடிவிலான கால்வாயாக மேம்படுத்தப்பட்ட தணிகாச்சலம் நகர் கால்வாயை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.