சென்னை: திருவொற்றியூர் குப்பத்தில் ரூ.275 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சூரை மீன்பிடி துறைமுகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 28ம் தேதி சென்னை, திருவொற்றியூர் குப்பத்தில் ரூ.275 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூரை மீன்பிடி துறைமுகம் திறப்பு விழா, புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.
இந்த விழா நடைபெறுவதை முன்னிட்டு, நேற்று திருவொற்றியூர் துறைமுகத்தை மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் சுப்பையன், எம்எல்ஏக்கள் எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர், மீன்வளத்துறை ஆணையர் கஜலட்சுமி, மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மண்டல குழு தலைவர்கள் தனியரசு, ஏ.வி.ஆறுமுகம், அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடனிருந்தனர்.