சென்னை: திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை சென்னை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இன்று முதல் அரசின் சாதனைகளை அமைச்சர்கள் மக்களிடம் எடுத்து கூறவுள்ளனர். ஆழ்வார்ப்பேட்டையில் தனது வீட்டிற்கு அருகே உள்ள வீடுகளுக்குச் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை செய்தார். திமுக அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முதல்வர் எடுத்துக் கூறிவருகிறார்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளுக்குச் சென்று பரப்புரை செய்கின்றனர். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொள்ளும் பணியை இன்று திமுக தொடங்கியுள்ளது. ஜூலை 3ம் தேதி இன்று தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் செல்ல வேண்டும். கழகச் செயல்வீரர்கள் ஒருவர் விடாமல் வீட்டுக்கு வீடு சென்று பிரசாரம் செய்வதை உறுதி செய்திட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, அமைச்சர்கள் இன்று வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து அரசின் சாதனைகளை சொல்லி பரப்புரையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.