சென்னை: டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு, நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. போதிய நீர் கடைமடை வரை சென்றடையாததால் குறுவை சாகுபடி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறியிருந்தனர். விவசாயிகள் கூறியிருந்த நிலையில் வேளாண் துறை அதிகாரிகள் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குறுவை பயிர் சேத ஆய்வு மற்றும் நிவாரணம் தொடர்பாக முதலமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் குறுவை பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 முதல் செப்டம்பர் 15-ஆம் தேதிவரை சுமார் 5.25 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு 125 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். இதற்கு மேட்டூர் அணையிலிருந்து 99.74 டி.எம்.சி. தண்ணீர் வழங்கியும், மீதமுள்ள தண்ணீரானது மழை மற்றும் நிலத்தடி நீர் மூலமாகவும் பூர்த்தி செய்யப்படும்.
எனவே, ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் நீர் இருப்பு மற்றும் இந்திய வானிலை மையத்தின் ஆண்டு மழைப் பொழிவு பற்றிய விபரங்களையும் பெற்று டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி தண்ணீர் திறப்பை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ஆம் தேதி 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு, அன்றே மாலைக்குள் படிப்படியாக 10 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டு, ஜூலை மாதத்தில் படிப்படியாக 16000 கனஅடியாக உயர்த்தி, ஆகஸ்ட் மாதத்தில் 18000 கனஅடியாக நீர் தேவைக்கேற்ப, மழையின் அளவுக்கேற்ப வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வெறும் 10 ஆயிரம் கன அடிதான்.
இதன் விளைவாக டெல்டா மாவட்டங்களில், ஆற்றங்கரை ஓரம் உள்ள பாசனப் பரப்புகள் மற்றும் சில தண்ணீர் திறந்துவிடப்பட்ட கால்வாய்களின் ஓரங்களில் உள்ள பாசனப் பரப்புகள் தவிர, மற்ற இடங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகி விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு, நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இதில் துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.