சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, தொகுதி பிரச்னை பற்றிய பேசியதாகவும், முதல்வரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கியதாகவும் தெரிவித்தார்.பாஜ தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, தொகுதி சம்பந்தமான கோரிக்கை மனுக்களை முதல்வரிடம் அவர் வழங்கினார்.
பின்னர் தலைமை செயலக வளாகத்தில் வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது: கோவையின் வளர்ச்சி மட்டுமல்லாது ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கான கோவை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான மத்திய அரசின் பணிகளுக்கு மாநில அரசால் தொய்வு ஏற்பட்டு வந்த நிலையில், நில எடுப்புக்கு மாநில அரசால் விதிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் நீக்குவதற்கு முதல்வர் உறுதியளித்தார். கோவை மாவட்டத்திற்கான மாஸ்டர் பிளான், ஈரோடு, திருப்பூர் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் எனவும், கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட கோரிக்கை மனுக்களையும் முதலமைச்சரிடம் வழங்கி இருக்கிறேன்.
திமுக – பாஜ உறவு பற்றிய கதைகளுக்குள் செல்ல விரும்பவில்லை. எதிர்க்கட்சியாகவும், மக்கள் பிரதிநிதிகளாகவும் எங்களின் பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். மத்திய அரசின் பணியிடங்களில் ஆர்எஸ்எஸ் பின்புலம் உள்ளவர்கள் நேரடியாக நியமிக்கப்படுவது தொடர்பாக கேட்கிறீர்கள். நாட்டின் பிரதமர் உட்பட அமைச்சர்களில் 99 சதவிகிதம் பேர் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள்தான். நாட்டையே ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் ஒப்படைத்திருக்கும் நிலையில் இதுபோன்ற கேள்விகள் ஏற்புடையதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.