* 2,967 கோயில்களுக்கு கடந்த 4 ஆண்டில் குடமுழுக்கு
* 7,671 கோடி ரூபாய் கோயில் நிலங்கள் மீட்பு
சென்னை: தமிழகத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றபோது, கோயில் பணிகளை முறையாகவும், சிறப்பாகவும் நடத்த வேண்டுமென பி.கே.சேகர்பாபுவை அறநிலைய துறை அமைச்சராக நியமித்து கோயில் திருப்பணிகள் எல்லாம் முன்னெப்போதும் இல்லாத வகையில் செம்மையாக நடைபெற வழிவகுத்தார். அதன்படி செய்யப்பட்ட பணிகள் குறித்தான முழு விவரம் பின்வருமாறு: பெருந்திட்ட வரைவு பணி: திருச்செந்தூர், பழனி, திருத்தணி, சமயபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட 19 கோயில்களில் ரூ.1770 கோடி மதிப்பீட்டில் பணிகள் மற்றும் பக்தர்களுக்கான ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
குடமுழுக்கு விழாக்கள்: கடந்த 20 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை குடமுழுக்கு விழாக்கள் நடைபெறாத 119 கோயில்கள் உள்பட 2,967 கோயில்களுக்கு குடமுழுக்கு விழாக்கள் நடந்து இறையன்பர்கள் மகிழ்கின்றனர். விரைவில் நாகப்பட்டினம், திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி கோயிலில் 3,000வது குடமுழுக்கு விழா ஜூன் 5ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கோயில்கள் சார்பில் திருமணங்கள்: முதல்வர் அறிவித்தபடி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு கோயில்கள் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 1,800 இணையர்களுக்கு திருமணங்கள் நடந்துள்ளன. ஒவ்வொரு இணையருக்கும் 4 கிராம் தங்க தாலி, பட்டுப்புடவை, பட்டு வேட்டி உள்பட ரூ.60,000 மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களுடன் முதல்வரால் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.
தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலங்கள்: இதுவரை 971 கோயில்களுக்கு சொந்தமான ரூ.7,671.23 கோடி மதிப்பிலான 7,560.05 ஏக்கர் நிலங்கள் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இதுபோக 2,01,097.42 ஏக்கர் நிலங்கள் நவீன புவியிடங்காட்டி உபகரணங்கள் மூலம் அளவீடு செய்யப்பட்டு, 1,23,851 எல்லை கற்கள் நடப்பட்டு கோயில் சொத்துகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. கோயில்களுக்கு சொந்தமான அசையா சொத்துகளிலிருந்து ரூ.1,054.40 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
ஸ்கோச் விருது: டெல்லியில் செயல்பட்டு வரும் ஸ்கோச் குரூப் நிறுவனமானது மக்களின் மேம்பாட்டிற்கு பயனளிக்கும் வகையில் 2025ம் ஆண்டிற்கான அரசுத்துறை நிறுவனங்களுக்கான ஸ்கோச் தங்க விருது இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இணையதள சேவையான ஒருங்கிணைந்த கோயில் மேலாண்மை திட்டத்திற்கு கடந்த மார்ச் 29ம் தேதி நடந்த விழாவில் வழங்கியது.
உணவு தரச்சான்று: ஒன்றிய அரசால் கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் தரச்சான்றிதழ் 523 கோயில்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் தரச்சான்றிதழ் பெற்ற மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மிக பயணம்: மானசரோவர் முக்திநாத் ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் இறையன்பர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த அரசு மானியம் உயர்த்தி வழங்கப்படுகிறது. அதேபோல, 60 முதல் 70 வயது வரையுள்ள மூத்தகுடிமக்கள் பயன்பெறும் வகையில் 2,000 பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கும், 920 பக்தர்கள் ராமேஸ்வரம் – காசி ஆன்மிக பயணத்திற்கும் அரசு செலவில் அழைத்து செல்லப்பட்டனர். ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு 1003 பக்தர்களும், புரட்டாசியில் வைணவ கோயில்களுக்கு 1,008 பக்தர்களும் அழைத்து செல்லப்பட்டனர்.
அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி: இறை தொண்டு புரியும் பணி அனைத்து சாதியினருக்கும் வழங்கப்பட வேண்டும் என்னும் நோக்கத்துடன் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை கடந்த 1972ம் ஆண்டில் கலைஞர் நிறைவேற்றினார். அச்சட்டம் பல்வேறு தடைகளை கடந்து முதல்வரின் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கலைஞரின் ஆட்சியில் பயிற்சி பெற்றவர்களில் 29 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். தற்போது முதல்வரின் ஆட்சியில் பயிற்சிகள் பெற்ற 3 பெண்கள் உள்பட 94 பேருக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 11 பெண் ஓதுவார்கள் உள்பட 45 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒருகால பூஜை திட்டம்: ஒருகால பூஜை கூட செய்ய முடியாத, நிதிவசதி இல்லாத 12,959 கோயில்களுக்கு தலா ரூ.1 லட்சம் அந்தந்த கோயில்களின் பெயரில் வங்கியில் முதலீடு செய்யப்பட்டு, கிடைக்கும் வட்டி தொகையில் பூஜை செலவினங்கள் செய்யப்பட்டு வந்தன. முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தில் ஒரு கோயிலுக்கு முதலீடு செய்யும் தொகை 2021ம் ஆண்டில் வைப்பு நிதி ரூ.1 லட்சம் என்பதை ரூ.2 லட்சமாக உயர்த்தியும், அதை மேலும் ரூ.2.50 லட்சமாக உயர்த்தி வழங்கினார். தற்போது 18,000 கோயில்கள் பயன்பெற்று வருகின்றன.
மலைக்கோயில்களுக்கு கம்பி வட ஊர்திகள்: பழனி கோயிலில் இதுபோன்ற வசதி செயல்பாட்டில் உள்ளது. கரூர் மாவட்டம் அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ரூ.9.10 கோடி மதிப்பீட்டிலும், சோளிங்கர் யோக நரசிம்மர் கோயிலில் ரூ.20.30 கோடி மதிப்பீட்டிலும், கம்பிவட ஊர்திகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பழனி மலை மற்றும் இடும்பன் மலை இடையே ரூ.90 கோடி மதிப்பீட்டிலும், அனுவாவியில் ரூ.20 கோடி மதிப்பீட்டிலும், திருநீர்மலையில் ரூ.19.60 கோடி மதிப்பீட்டிலும், திருக்கழுக்குன்றத்தில் ரூ.30.50 கோடி மதிப்பீட்டிலும், திருப்பரங்குன்றம் காசிவிசுவநாத சுவாமி கோயிலில் ரூ.32.18 கோடி மதிப்பீட்டிலும் கம்பி வட ஊர்திகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை, சுவாமிநாத சுவாமி கோயிலில் ரூ.3.55 கோடி மதிப்பீட்டிலும், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ.5.20 கோடி மதிப்பீட்டிலும் மின் தூக்கிகள் நிறுவும் பணிகள் நடந்து வருகின்றன.
அன்னை தமிழில் வழிபாடு: கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக 48 முதுநிலை கோயில்களில் செயல்படுத்தப்பட்டது. தற்போது 294 கோயில்களில் தமிழில் வழிபாடு நடந்து வருகிறது. அன்னை தமிழில் வழிபாடு செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60 சதவிகித தொகை பங்கு தொகையாக வழங்கப்படுகிறது. மேலும் 14 போற்றி நூல்களை அச்சிட்டு வழங்கி முதல்வரின் தலைமையிலான அரசு இத்திட்டத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
தங்க முதலீட்டு திட்டம்: இருக்கன்குடி, பெரியபாளையம், சமயபுரம், பழனி, திருவேற்காடு, மாங்காடு மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட 21 கோயில்களில் பயன்பாடற்ற பொன் இனங்கள் ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு, ஒன்றிய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி சுத்த தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லி கிராம் தங்கம் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டு வட்டியாக ரூ.17 கோடியே 81 லட்சத்து 36 ஆயிரம் கிடைக்க பெறுகிறது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 4 ஆண்டுகால ஆட்சியின் அறநிலைய பணிகள் தமிழ் பண்பாட்டின் பெருமையை எடுத்துரைப்பவையாக அமைந்துள்ளன. இறையன்பர்கள், திராவிட நாயகர் ஆட்சியின் அறநிலையத்துறை தொண்டுகள் பல்லாண்டு காலம் தமிழ் மண்ணின் பெருமைகளை நிலைநிறுத்துவதாக அமைந்துள்ளன என போற்றுகின்றனர்.
* யுனெஸ்கோ விருது
கும்பகோணம், துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு மரபு சார்ந்த கட்டிட கலையை பாதுகாக்கும் பொருட்டு நவீன அறிவியல் உதவியுடன் பாரம்பரியம் மாறாமல் கோயிலை புனரமைத்தற்காக கலாச்சார பாரம்பரிய புனெஸ்கோ ஆசிய, பசிபிக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
* கோயில்களில் அன்னதானம்
திருவரங்கம், பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம், மதுரை, ராமேஸ்வரம், திருவண்ணாமலை, பெரியபாளையம், மேல்மலையனூர், ஆனைமலை, கள்ளழகர், மருதமலை ஆகிய 13 கோயில்களில் இறையன்பர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானமும், 764 கோயில்களில் ஒருவேளை அன்னதானமும் நடந்து வருகிறது. இதன் மூலம் 3.5 கோடி இறையன்பர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
* 1,000 ஆண்டுகள் பழமையான கோயில்களில் திருப்பணி
2022-23ம் நிதியாண்டு முதல் 2024-25ம் நிதியாண்டு வரை ஆண்டிற்கு ரூ.100 கோடி வீதம் ரூ.300 கோடி அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளன. 274 கோயில்களில் ரூ.429.67 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை 53 கோயில்களில் குடமுழுக்கு நிறைவு பெற்றுள்ளன.
* அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு
முருகப்பெருமானின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் கடந்தாண்டு ஆகஸ்ட் 24, 25ம் தேதிகளில் வெகு சிறப்பாக நடந்தது. இந்த மாநாட்டை முதல்வர் தொடங்கி வைத்து, வாழ்த்துரை வழங்கினார். 2ம் நாள் துணை முதல்வர் வாழ்த்துரை வழங்கினார். மாநாட்டில் 17 நாடுகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் முருக பக்தர்கள், அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதியரசர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 1,003 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கில் மெய்நிகர் காட்சிகள், முப்பரிமாண பாடலரங்கம், சிறப்பு புகைப்பட கண்காட்சி போன்றவற்றை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பார்வையிட்டனர்.