சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர், எம்பி, எம்எல்ஏக்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நாளை காணொலி காட்சி வாயிலாக நடக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளன. தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக முன்கூட்டியே தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக, கடந்த 1ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. அதில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக, தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நிதி, வரி வருவாய் உள்ளிட்ட அனைத்தையும் முறையாக வழங்காமல் வஞ்சகம் செய்யும் ஒன்றியத்தில் ஆளும் பாஜவையும், அதன் பாசிச-எதேச்சதிகாரப்போக்கு அனைத்திற்கும் துணை போகும் அதிமுகவையும் தமிழ்நாட்டு மக்கள் கடந்த தேர்தல்களில் தொடர்ந்து புறக்கணித்து வரும் நிலையில், எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வஞ்சக பா.ஜ.வையும், துரோக அதிமுகவையும் முழுமையாக விரட்டியடித்து, இந்தியாவின் ஜனநாயகக் காவலராம் திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சி தொடர்ந்திட அனைத்துத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற திமுகவின் அனைத்து நிலை நிர்வாகிகளும் இன்று முதல் தேர்தல் பணிகளை விரைவுபடுத்தி, அயராது பாடுபடுவோம். தலைவர் மு.க.ஸ்டாலினை மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர வைப்போம் என்று சூளுரைக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் 7ம் தேதி (நாளை) திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள்- நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்- தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி (நாளை) காலை 10.30 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இக்கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.