சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு மனிதநேயத் திட்டங்களில் மற்றும் ஒரு மாபெரும் வெற்றித் திட்டமான “முதல்வர் மருந்தகம்” திட்டம் 8 நாட்களில் ரூ.27 லட்சத்திற்கு மேல் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால்7 லட்சத்து 68 ஆயிரத்து 766 ரூபாய் மக்களுக்கு சேமிப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய நடுத்தர குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து, அவர்கள் வளம்பெற பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். மகளிர்க்கும், மாணவியர்க்கும், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர்க்கும் அரசு நடத்திவரும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா “விடியல் பயணத் திட்டம்”. மகளிர்க்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்”. அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் “புதுமைப் பெண் திட்டம்”; அதேபோல மாணவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் “தமிழ்ப் புதல்வன் திட்டம்”, “கலைஞர் வீடு வழங்கும் திட்டம்”, முதலான பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.
இத்தகையத் திட்டங்களால், குடும்பங்களில் ஏற்படும் செலவுகள் குறைகின்றன. பொருளாதாரம் உயர்கிறது. பொதுவாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் உணவுச் செலவை அடுத்து அதிகம் செலவாவது அக்குடும்பத்தின் கல்வி வளர்ச்சிக்கும், மருத்துவச் செலவுகளுக்குமேயாகும். இந்த இரண்டு செலவினங்களையும் குறைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதனால்தான், கல்வியும் மருத்துவமும் என் இரண்டு கண்களுக்குச் சமம் என்று கூறி இந்த இனங்களில் குடும்பங்களுக்கு ஏற்படும் செலவினங்களை குறைத்து வருகிறார்.
மருத்துவத் துறையைப் பொருத்தவரை, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைச் செயல்படுத்தி மருத்துவப் பணியாளர்கள் பொதுமக்களின் இல்லங்களுக்கேச் சென்று மருந்துகளையும், மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள். இத்திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று இதுவரை 2 கோடிக்கு மேலான மக்கள் தமிழ்நாட்டில் பயனடைந்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் மனிதாபிமான உணர்வோடு ஏழை எளியவர் மீது கருணைகொண்டு அவர்களுக்கு மேலும் உதவுவதற்காக இந்தியாவிலேயே புதுமையாக முதல் முறையாக ஒரு திட்டடத்தை உருவாக்கி இருக்கிறார்.
அந்தத் திட்டம்தான் முதல்வர் மருந்தகம் திட்டம். தமிழ்நாடு முழுவதிலும் தனியார் மூலமாக 462 முதல்வர் மருந்தகங்களும், கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக 538 முதல்வர் மருந்தகங்களும் ஆக மொத்தம் 1,000 முதல்வர் மருந்தகங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த 24ம் தேதி அன்று தொடங்கி வைக்கப்பட்டன. இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட கடந்த 8 நாட்களில் அதாவது கடந்த 3ம் தேதி வரை முதல்வர் மருந்தகங்களில் தனியார் கடைகளில் 13 லட்சத்து 73 ஆயிரத்து 449 ரூபாய்க்கும், கூட்டுறவு நிறுவனக் கடைகளில் 13 லட்சத்து 69 ஆயிரத்து 380 ரூபாய்க்கும் மொத்தம் 27 லட்சத்து 42 ஆயிரத்து 829 ரூபாய்க்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்த கடைகளில் வாங்கப்படும் மருந்துகளின் விலையில் 50 % முதல் 75 % வரை குறைந்த விலைக்கு வழங்கப்படுகின்றன. இதன் மூலம் கடந்த 8 நாட்களில் பொதுமக்களுக்கு 7 லட்சத்து 68 ஆயிரத்து 776 ரூபாய் சேமிப்பு கிடைத்திருக்கிறது. தனியார் நடத்தும் கடைகளில் 22 ஆயிரத்து 332 பேரும், கூட்டுறவு நிறுவன முதல்வர் மருந்தகங்களில் 27 ஆயிரத்து 721 பேரும் என மொத்தம் 50 ஆயிரத்து 53 பேர் பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலம் 1,000 பேர் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். தனியார் நடத்தும் ஒரு கடைக்கு 3 லட்சம் ரூபாயும், கூட்டுறவு நிறுவனம் நடத்தும் கடைக்கு 2 லட்சம் ரூபாயும் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
முதல்வருக்கு நன்றி தெரிவித்த முதல்வர் மருந்தக உரிமையாளர்: இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்த மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி வருகிறார்கள். சென்னை புளியந்தோப்புப் பகுதியில் முதல்வர் மருந்தகம் அமைத்துள்ள அப்ரீன் என்பவர், நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். டி.பார்ம் படித்துள்ளேன். எனது பெற்றோர் என்னை மிகவும் சிரமப்பட்டு படிக்கவைத்தனர். படிப்பை முடித்து வேலை தேடியபோது முதல்வர் மருந்தகம் குறித்து அறிவிப்பு வெளியானது. உடனே விண்ணப்பித்தேன். எனக்கு முதல்வர் மருந்தகம் வைக்க அனுமதியும் கிடைத்தது.
இந்த மருந்தகம் அமைப்பதற்காக எனக்கு 3 லட்சம் ரூபாய் மானியமும் கிடைத்துள்ளது. என்னை தொழில் முனைவோராக்கி மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை நிரந்தர வருமானம் கிடைக்கும் அருமையான வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இவரைப் போல அனைவரும் மகிழ்ந்து பாராட்டுகின்றனர். பொதுமக்களும் குறைந்த விலைக்கு மருந்துகள் கிடைப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றனர். முதல்வரின் புகழ்பாடும் பல்வேறு திட்டங்களைப் போலவே இந்த முதல்வர் மருந்தகம் திட்டமும் ஒரு வெற்றித் திட்டமாகும்.