சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதிய ‘நாடாளுமன்ற தேர்தல் 2024-40/40 தென் திசையின் தீர்ப்பு’ எனும் வரலாற்று தேர்தல் ஆவண நூல் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. இதை அமைச்சர் துரைமுருகன் வெளியிட, டி.ஆர்.பாலு எம்பி பெற்றுக்கொண்டார். சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் ‘நாடாளுமன்றத் தேர்தல் 2024-40/40 தென் திசையின் தீர்ப்பு’ நூலினை திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் வெளியிட, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. பெற்றுக் கொண்டார்.
18வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் சர்வாதிகாரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடந்த போர் ஆகும். பாஜ 400 இடங்களை கைப்பற்றுவோம் என்று சூளுரைத்தது. ஆனால், தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையை இந்தியா கூட்டணி ஏற்படுத்தியது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாற்பதுக்கு நாற்பது என்கிற வரலாற்று வெற்றியை திமுக கூட்டணி பெற்றதை குறித்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதிய ‘40/40 தென் திசையின் தீர்ப்பு புத்தகம்’ நேற்று வெளியிடப்பட்டது.
இந்த புத்தகம், பெற்ற வரலாற்று வெற்றியை சரித்திர சாதனை ஆவணமாக பதிவு செய்கிறது. இந்நூலில் 2024 மக்களவை ேதர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றியை திமுக கூட்டணி எப்படி சாத்தியமாக்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்த தேர்தல் வியூகம், 2023ல் இந்தியா கூட்டணிக்கு வித்திட்ட சென்னை ஒய்.எம்.சி.ஏ.,வில் நடந்த அவரது பிறந்தநாள் விழா, பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் நடந்த இந்தியா கூட்டணிக் கூட்டங்கள், திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட பயிலரங்கம், கூட்டணிக் கட்சிகளுக்கிடையே நடந்த தொகுதிப் பங்கீடு, திமுக தேர்தல் அறிக்கை, திமுக வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்கள், பல்வேறு ஊடகங்களுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டிகள், திமுகவின் தேர்தல் விளம்பரங்கள், 40/40 வெற்றியை பெற்ற தேர்தல் முடிவுகள், முதல்வர், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வென்ற தேர்தல்கள், அதன் புள்ளிவிவரங்கள், ஏராளமான படங்கள், இன்ஃபோகிராபிக் என விரிவாகப் பதிவு செய்திருக்கிறது ‘நாடாளுமன்றத் தேர்தல் 2024 – 40/40 தென் திசையின் தீர்ப்பு’ – நூல்.
இந்த நூல் வெளியீட்டின் போது திமுக முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் எம்.பி., கனிமொழி எம்.பி., மாவட்ட செயலாளர்கள், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, துணை அமைப்புச்செயலாளர்கள் எஸ்.ஆஸ்டின், தாயகம் கவி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.