சென்னை: உள்ளாட்சி அமைப்பில் பிரதிநிதித்துவம் வழங்கியதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னையில் நாளை பாராட்டு விழா நடைபெறும், என்று மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ரெ.தங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையையும் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை தொடர்ந்து அறிவித்து செயல்படுத்தி, மாற்றுத்திறனாளிகளின் இதயங்களில் வாழ்ந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில், மேலும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க அம்சமாக மாற்றுத்திறனாளிகள் சமூகம் ‘உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் பிரதிநிதித்துவம்’ வழங்கிட சட்டமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியதுடன், மதுரையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை கவுரவப்படுத்தும் விதமாக, எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான திமுகவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனி அணி அறிவித்த மாற்றுத்திறனாளிகளின் காவலர், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வரும் 21ம் தேதி (நாளை) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ‘மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பு குழு’ சார்பில் மாபெரும் நன்றி பாராட்டு விழா நடக்கிறது. விழாவிற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தினர் அனைவரும் குடும்பத்துடன் அலைகடலென திரண்டு வந்து, இந்தியாவில் உள்ள முதல்வர்களுக்கு எல்லாம் வழிகாட்டு முதல்வராக திகழும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.