புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர்-சபாநாயகர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா அறைக்கு மாறி மாறி சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்கால் நெடுங்காடு தனி தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சந்திரபிரியங்கா (34). போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். அவரது குடும்ப பிரச்னையில் அதிருப்தியடைந்த முதல்வர், செயல்பாடு சரியில்லை என்று கூறி அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னரிடம் கடிதம் கொடுத்தார். 14 நாட்கள் கழித்து அவர் ஜனாதிபதி ஒப்புதலின்படி டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதையடுத்து சட்டசபையில் உள்ள சந்திரபிரியங்கா அலுவலகம் காலி செய்யப்பட்டது. அவரது அறைக்கு வெளியே இருந்த பெயர் பலகையும் அதிரடியாக அகற்றப்பட்டது. அந்த அறைக்கு சட்டசபை செயலகம் மூலம் சீல் வைக்கப்பட்டது. அதாவது சட்டசபை செயலர் தயாளன் கையெழுத்திட்ட கடிதம் அடங்கிய சீல் ஒட்டப்பட்டது. இதன்மூலம் மீண்டும் சட்டசபை செயலகம், அந்த சீலை அகற்றாதவரை யாரும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
கடந்த காலங்களில் ஒரு அரசில் பதவியிலிருந்த அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்தாலோ அல்லது நீக்கம் செய்யப்பட்டாலோ அறைகளை அவர்களாகவே காலி செய்துவிடுவர். பயன்பாடின்றி இருப்பினும் அந்த அறைக்கு பெரும்பாலும் சட்டசபை செயலகத்தால் சீல் வைக்கப்படாது. தற்போது அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட்ட அறைக்கு சட்டசபை செயலகம் சீல் வைத்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே இவ்விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமிக்கு, பாஜ நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் வெளியான நிலையில், தற்போது சபாநாயகர் மூலம் அடுத்தகட்ட நெருக்கடி கொடுக்க காய் நகர்த்துவதாக கூறப்பட்டது. முதல்வர் ரங்கசாமி மீண்டும் தன்னிச்சையாக புதிய அமைச்சர் நியமன விவகாரத்தில் முடிவுகளை எடுத்தாலும் சபாநாயகரின் உத்தரவு இல்லாமல் அறையை திறக்க முடியாத சூழல் உருவாகி உள்ளதால் குழப்பம் ஏற்பட்டது. கடந்த சில தினங்களாக என்.ஆர்.காங்கிரசில் காரைக்காலைச் சேர்ந்த மூத்த எம்எல்ஏ திருமுருகன அறைக்கு சென்று வந்ததாக தகவல் வெளியானது.
இவரைத்தான் அடுத்த அமைச்சராக நியமிக்க முதல்வர் ரங்கசாமி கடிதம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் புதிய அமைச்சருக்கு ஒப்புதல் தராமல், சந்திர பிரியங்காவை மட்டும் டிஸ்மிஸ் செய்து ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சட்டசபை செயலர் தயாளன் கையொப்பமிட்டு, இரண்டு கதவுகளை இணைத்து ஒட்டப்பட்ட சீலிடப்பட்ட கடிதம் நேற்று மாலை கிழித்தெறியப்பட்டது. அதற்கு பதிலாக முதல்வரின் தனி அதிகாரி அமுதன் கையொப்பமிட்ட கடிதத்தால் சந்திரபிரியங்கா அறை மீண்டும் சீல் வைக்கப்பட்டது. சபாநாயகர் உத்தரவின் பேரில் ஏற்கனவே ஒட்டப்பட்ட கடிதம் கிழித்தெறியப்பட்டிருப்பது சட்டசபை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சட்டசபை செயலர் தயாளனிடம் கேட்டபோது, ‘சந்திரப்பிரியங்கா அறை காலி செய்யப்பட்டு திறந்து கிடந்தது. அதில் அமைச்சரவைக்கு சொந்தமான சில பொருட்களும் இருந்தது. யார் வேண்டுமானால் உள்ளே செல்லக்கூடும் என்பதால் சட்டசபை செயலகம் அதனை தற்காலிகமாக எடுத்துக்கொண்டது. பின்னர் அமைச்சரவை அலுவலகத்தின் கீழ் நேற்று மாலை மீண்டும் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இதனை தொடர்ந்தே முதல்வரின் தனி அதிகாரி மீண்டும் அங்கு கடிதத்தை ஒட்டியுள்ளார். இதில் எங்களுக்குள் மோதல் ஒன்றும் இல்லை’ என்றார்.
புதுச்சேரிஅமைச்சரவையில் பாஜவை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் இருக்க வேண்டும். அவர்களுக்கு முக்கிய இலாகாக்கள் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமிக்கு பாஜ நெருக்கடி கொடுத்து வருகிறது. தற்போது சந்திர பிரியங்கா பதவி பறிப்புதான் சரியான நேரம் என்று திட்டமிட்டு, சபாநாயகராக உள்ள பாஜ எம்எல்ஏவான செல்வம் மூலம் அமைச்சர் பதவியை பிடிக்க விளையாட்டை தொடங்கி உள்ளது. இதனால், என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.