சென்னை; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (23.06.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கழிவு மேலாண்மை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட தூய்மை இயக்கத்தின் ஆட்சிக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் தினம்தோறும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் தூய்மை இயக்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தினை செயல்படுத்திட தூய்மை தமிழ்நாடு நிறுவனம் (Clean Tamil Nadu Company Limited – CTCL)) என்ற அமைப்பு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த இயக்கம் முதலமைச்சர் தலைமையிலான ஆட்சிக் குழு, தலைமைச் செயலாளர் தலைமையிலான மாநில அளவிலான செயற்குழு, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட அளவிலான தூய்மைக் குழு மற்றும் வட்டார அளவில்/ நகர்ப்புற உள்ளாட்சி அளவிலான தூய்மைக் குழு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
தூய்மை இயக்கத்தின் மாநில அளவிலான செயற்குழுவின் முதல் கூட்டம் 30.04.2025 அன்று தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முதற்கட்டமாக, உலக சுற்றுச்சூழல் தினமான 5.06.2025 அன்று தமிழ்நாடு முழுவதும், தலைமைச் செயலகம், பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி இயக்குநகரங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆகிய 1,100 அலுவலகங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், மின்னணு கழிவுகள், உலோகக் கழிவுகள், காகித கழிவுகள், கண்ணாடி கழிவுகள், பயன்படுத்த இயலாத மரத் தளவாடங்கள் போன்ற பலவிதமான கழிவுகளைச் சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 593 டன் அளவுள்ள கழிவுகள் சேகரிக்கப்பட்டு இதுவரை சுமார் 60 இலட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இந்த முன்னெடுப்பு பிற அரசுத்துறை நிறுவனங்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து, தூய்மை இயக்கத்தின் ஆட்சிக் குழுவின் முதல் கூட்டம் முதலமைச்சர் அவர்களின் தலைமையில் இன்றையதினம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் அவர்கள், அனைத்து உள்ளாட்சி நிறுவனங்களும், கழிவுகளை, உற்பத்தி ஆகின்ற இடங்களிலேயே தனித்தனியாக பிரித்து கையாள வேண்டும் என்றும், இதன்மூலம் உள்ளாட்சி அமைப்புகள் குப்பைக் கிடங்குகளை மட்டுப்படுத்தி, புதிய கழிவுகளை குப்பைக் கிடங்குக்கு அனுப்புதை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
உள்ளாட்சி அமைப்புகளின் கழிவு மேலாண்மையை கண்காணித்து, நடுநிலையான முறையில் கருத்துகளை தூய்மை தமிழ்நாடு நிறுவனம் (CTCL) வழங்கிடவும், அத்துடன் ‘Real-Time Data’-வை உள்ளாட்சி அமைப்புகள் பகிர வேண்டும் என்றும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குவதற்கு தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் தூய்மை தமிழ்நாடு நிறுவனத்துடன் ஒன்றிணைந்து கழிவு மேலாண்மையிலிருந்து வருவாய் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்த தூய்மை இயக்கத்தின் நோக்கங்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேரும் வகையில் பரப்புரை செய்ய வேண்டும் என்றும், இளைய தலைமுறையினரை கவரும் வகையில் இது அமைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். குப்பை கொட்டுகிற இடங்களை சுத்தம் செய்து, மரங்கள் நட்டு, மக்கள் பயன்படுத்தும் விதமாக தூய்மை முனைகளாக மாற்றிட மக்களை ஊக்குவித்திட வேண்டும் என்று தெரிவித்தார்.
முக்கியமாக, அனைத்து அரசுத் துறைகளும் தூய்மை தமிழ்நாடு நிறுவனத்துடன் ஒத்துழைத்து, தூய்மை இயக்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றிட உறுதி செய்திட வேண்டும் என்றும், கழிவு மேலாண்மை செயல்பாடுகளில் உள்ளாட்சி அமைப்புகள் N.G.O-க்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மூலமாக பொதுமக்கள் ஒத்துழைக்க சமூகரீதியாக ஊக்குவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மையில் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு. தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தின் பொறுப்புகள் மற்றும் கடமைகள், நிதி ஆதாரம் மற்றும் வருவாய் ஈட்டும் செயல்பாடுகள், தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தின் செயல்திறன் மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் (பொறுப்பு) பிரதீப் யாதவ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டா பி. சந்தர மோகன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன். உயர்கல்வித் துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, நீர்வளத்துறை செயலாளர் ஜெ. ஜெயகாந்தன், மற்றும் தொடர்புடைய துறைகளின் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.