நாகர்கோவில்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குமரியை சேர்ந்த வாலிபர் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை காவல்துறை அவசர உதவி கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு வாலிபர் ஒருவர் போன் செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன். இன்னும் சிறிது நேரத்தில் வெடித்து சிதறிவிடும் என கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இதையடுத்து முதலமைச்சர் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்த போலீசார் உஷாராகினர். மேலும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. இதற்கிடையே போனில் பேசிய வாலிபர் குறித்து போலீசார் விசாரித்தனர். இதில் மிரட்டல் வந்த செல்போன் எண் குமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியில் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக குமரி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
குமரி தனிப்படை போலீசார் விசாரணையில் மிரட்டல் விடுத்தவர் பூதப்பாண்டி அருகே உள்ள உச்சம்பாறை பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (30) என்பது தெரிய வந்தது. அவரை இன்று அதிகாலையில் அவரது வீட்டில் வைத்து போலீசார் பிடித்தனர். பின்னர் அவரை பூதப்பாண்டி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர். இதில் இசக்கிமுத்து ஏற்கனவே 2, 3 முறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்து உள்ளேன் என மிரட்டியதும், அவரை பலமுறை போலீசார் எச்சரித்து அனுப்பி இருந்ததும் தெரிய வந்தது.