திண்டுக்கல்: முதல்வர் போட்டியை உருவாக்கி அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜ துடிக்கிறது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 13வது மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 2026 தேர்தல் முடிந்தவுடன் அதிமுக – பாஜ கூட்டணி ஆட்சி. அதிமுகவை சேர்ந்த முதல்வர் யார் என்பதையும் அவர்கள் முடிவு செய்து கொள்வார்கள் என அமித்ஷா கூறுகிறார். அப்போது முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அமித்ஷா ஏற்கவில்லை என்றே தெரிகிறது.
அதிமுகவில் முதல்வர் போட்டியை பாஜ உருவாக்கியுள்ளது. இதற்காகத்தான் டெல்லியில் எடப்பாடி, செங்கோட்டையனை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்மூலம் பாஜ அதிமுகவை கபளீகரம் செய்கிறது. மாநில கட்சியுடன் கூட்டணி சேர்ந்து விட்டு பின் அக்கட்சியை காலி செய்வது தான் பாஜவின் வழக்கம். தமிழகத்தில் கால் ஊன்ற பல முயற்சிகள் எடுத்து தோற்றுப்போன நிலையில் தற்போது பாஜ முருக கடவுளை எடுத்தால் வெற்றி பெறலாம் என முயற்சி செய்கிறார்கள். இவ்வாறு கூறினார்.