சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். முதல்வர் பேசுகையில்; தமிழ்நாடு வரலாற்றில் இவ்வளவு பெரிய திட்டம் இதுவரை உருவாக்கப்பட்டது இல்லை. மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ரூ.7,000 கோடி தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. நீதிக்கட்சி காலம் தொடங்கி தற்போது வரை சமூகநீதியானது தமிழ்நாட்டை வழிநடத்தும் கோட்பாடாக உள்ளது.
கலைஞர் ஆட்சியில் பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பெண்களுக்கு சொத்துரிமை வழங்கி அதை சட்டமாகவும் இயற்றியது கலைஞர் அரசின் சாதனை என்று கூறியுள்ளார். நாட்டிலேயே முதல்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை கலைஞர் அரசு அமல்படுத்தியது. தொடக்க காலத்தில் இருந்தே தாய்வழிச் சமூக முறைதான் மனிதகுலத்தை வழிநடத்தி வந்திருக்கிறது. மதம், பழமையான மரபுகளின் பெயரால் பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டிருந்தனர்.
பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தது கலைஞர் அரசு. மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை 1989-ல் ஆட்சிக்கு வந்த கலைஞர் சட்டமாக்கினார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்பது பெண் இனத்துக்கு திராவிட இயக்கம் வழங்கிய மாபெரும் அதிகாரக் கொடை என்று அவர் கூறியுள்ளார்.
பெண்களின் உயர்கல்விக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. 1973-ல் ஆண்கள் மட்டுமே பங்கெடுத்து வந்த காவல்துறையில் பெண்களுக்கும் பணி பொறுப்புகள் வழங்கப்பட்டன. சமூகநீதி திட்டங்களிலேயே மாபெரும் திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.