வேலூர்: பாஜவின் ஊழல் முகத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்றே தீருவோம் என்று வேலூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக பவள விழா, கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் அண்ணா பிறந்த நாள் விழா ஆகிய திமுக முப்பெரும் விழா வேலூர் அடுத்த பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் நேற்று நடந்தது. விழாவுக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ வரவேற்றார். இதில் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அறக்கட்டளை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 4 மண்டலங்களில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி ஆகியவற்றில் கட்சிப்பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு நற்சான்று மற்றும் பணமுடிப்புகளை வழங்கினார். மேலும் கி.சத்தியசீலனுக்கு பெரியார் விருது, க.சுந்தரத்திற்கு அண்ணா விருது, அமைச்சர் ஐ.ெபரியசாமிக்கு கலைஞர் விருது, மல்லிகா கதிரவனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது, ந.ராமசாமிக்கு பேராசிரியர் விருது ஆகியவற்றை வழங்கி பேசியதாவது:
ஒரு அரசியல் இயக்கம் தொடர்ந்து 75 ஆண்டுகள் நின்று நிலைத்திருப்பது சாதாரணமானது அல்ல. இந்த வேலூர் கோட்டை முதல் குமரி கடல் வரை தொண்டர்கள்தான் இந்த இயக்கத்தை கட்டி காத்துக் கொண்டிருக்கிறீர்கள். எந்த கட்டிடமும் கட்டுவதற்கு முன்பு எடுத்து வைக்கப்படுவது செங்கல். நான் சொல்லும் செங்கல் வேறு. நீங்கள் வேறு எதையாவது நினைத்து கொள்ளாதீர்கள். அந்த செங்கல் கட்டிடமாக உருவாகும்போது திறப்பு விழாவின் போது வெளியில் தெரியாது. மலர் மாலைகள்தான் தெரியும். அந்த மாலைகளும் உதிர்ந்து விடும். ஆனால் செங்கல்தான் கட்டிடத்தை கடைசி வரை தாங்கி நிற்கும். அத்தகையவர்கள்தான் தொண்டர்கள். மிக முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கிறோம். இந்திய ஜனநாயகத்தை காப்பதற்காக நடக்கும் போர்களத்தில் நின்று கொண்டிருக்கிறோம். 1967ம் ஆண்டு முதலில் ஆட்சியை அமைத்தோம். பின்னர் 1971, 1989, 1991, 2006, 2021 என 6 பொதுத்தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளோம். ஒருபக்கம் ஆட்சி, மறுபக்கம் கட்சி. இந்த இயக்கம் ஆண்ட போதெல்லாம் தமிழகத்தை அனைத்து துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக வளர்ச்சி காண வைத்திருக்கிறோம். இடையிடையே கொள்கையற்ற அதிமுக வந்து மாநிலத்தை சீரழித்தாலும், தமிழகத்தை வளர்ச்சியடைய செய்துள்ளோம்.
இன்று தமிழகத்தின் வளர்ச்சி, தமிழ்நாட்டின் மக்கள் வளர்ச்சி பலருக்கு பொறாமையாக இருக்கிறது. தமிழ்நாடு என்ற மாநிலத்தை அதற்கான அதிகாரத்தை சிதைப்பதன் மூலம் அழிக்க பார்க்கிறார்கள். ஜிஎஸ்டி மூலம் மாநில உரிமையை பறித்தார்கள். ஒரு மாநில வளர்ச்சிக்கு முக்கிய நிதி ஆதாரம், வரி வருவாய்தான். அதை பறிப்பதன் மூலம் மாநில வளர்ச்சியை தடுக்கிறார்கள். மக்களுக்கான அடிப்படை வசதிகள், திட்டங்களை வழங்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. அப்படிப்பட்ட நிதி ஆதாரம் கிடைக்காமல் செய்ய ஜிஎஸ்டி மூலம் அடைத்தார்கள். நான் கேட்கிறேன். நீங்கள் வசூலித்த ஜிஎஸ்டியை முறையாக பிரித்து அளிக்கிறீர்களா? அதேபோல் கல்வி மிக மிக முக்கியமான துறை. ஒவ்வொரு மாநில அரசும் அந்த மாநிலத்துக்கு ஏற்ப கல்வியை வழங்கும். புதிய கல்விகொள்கை மூலம் நமது மாநில கல்வி வளர்ச்சியை தடுக்க பார்க்கிறார்கள். கல்வியில் தமிழ்நாடு வளர்ச்சியடைந்து விட்டது. அதை அழிக்க பார்க்கிறார்கள். அதேபோல் நீட் தேர்வு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கக்கூடியது. லட்சக்கணக்கில் செலவு செய்தால்தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள். சில தனியார் கோச்சிங் சென்டர்களின் லாபத்துக்குதான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதனால்தான் அனிதா தொடங்கி சமீபத்தில் ஜெகதீசன் வரை ஏராளமான மாணவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இத்தகைய உயிரிழப்புகள் வடமாநிலங்களிலும் நடக்க ஆரம்பித்துள்ளது. கடந்த 16ம் தேதி ஜார்கண்ட மாணவி ராஜஸ்தானில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் மட்டுமல்ல கடந்த ஆண்டு 22 மாணவர்கள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். இதை தடுக்கக்கூடிய அரசாக பாஜ உள்ளதா? இரக்கமற்ற அரசாகவே பாஜ அரசு உள்ளது.
நேற்று தாய்மார்கள் கேட்பது போல் மீம்ஸ் பார்த்தேன். எங்கள் முதல்வர் சொன்ன ரூ.1000 வந்தாச்சு. நீங்கள் சொன்ன ரூ.15 லட்சம் என்னாச்சு? இது வைரலாகிவிட்டது இன்று. நாங்கள் பிரதமரை பார்த்து நீங்கள் இதை செய்யுங்கள் அதை செய்யுங்கள் என்று கேட்கவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்றுதான் கேட்கிறோம். தமிழ்நாட்டில் எத்தனை வாக்குறுதிகளை அளித்தார். உதாரணத்துக்கு 2015ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை வரும் என்று சொன்னார்கள். அதற்கு இப்போதுதான் டெண்டர் விட்டுள்ளார்கள். கடந்த 9 ஆண்டுகளில் என்ன சாதனை என்றால் 2014ல் ஆட்சிக்கு வரும்போது சமையல் சிலிண்டரின் விலை ரூ.450, இன்று ரூ.1,060. மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது. தேர்தலுக்கு இப்போது ரூ.200 குறைத்துள்ளார்கள். அதேபோல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.71. இன்று அது ரூ.102. ஒன்றிய அரசு வரியை மூன்று மடங்கு ஏற்றியிருக்கிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூ.55 ஆக இருந்தது. இப்போது ரூ.94.
ஒன்றிய பாஜ அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறது. ஆட்சிக்கு வரும்போது அன்னிய கடன் ரூ.55 லட்சம் கோடியாக இருந்தது. இன்று அது 9 ஆண்டுகாலத்தில் ரூ.155 கோடியாக உயர்ந்துள்ளது. பெரிய நிறுவனங்களுக்கு வாராக்கடன் என்று சொல்லி ரூ.14 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ளது. பணவீக்கம் அதிகமாகியிருக்கிறது. இப்படி வேதனையை தந்த பாஜ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அண்மையில் வெளியான சிஏஜி அறிக்கையில் ரூ.7.50 லட்சம் கோடிக்கு முறைகேடு நடந்திருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டில் அதிகம் செய்துள்ளது சிபிஐ அதிகாரிகள்தான் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமே புள்ளி விவரம் கொடுத்துள்ளது. அப்படிப்பட்ட ஊழல் முகத்தை மறைக்க பார்க்கிறார்கள். பாஜவின் ஊழல் முகத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியாக வேண்டும்.
தமிழகம் உட்பட 40 தொகுதியிலும் நாம்தான் வெற்றி பெற்றே தீருவோம். அதுமட்டும் போதாது. இந்தியா முழுவதும் வெற்றிபெற்றாக வேணடும். அதனால்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம். மத்தியில் நமது கூட்டணி ஆட்சி அமைந்தால் 15 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட முடியுமா, முடியாதா? நீட் தேர்வை ரத்து செய்ய முடியுமா, முடியாதா? தமிழ்நாட்டிற்கு தேவையான ரயில்திட்டங்களை கொண்டு வர முடியுமா, முடியாதா? இந்தியாவை காக்க இந்தியா கூட்டணியை வெல்ல வைக்க வேண்டியது நமது கடமைதான். இந்தியா முழுமைக்கும் சமூக நீதியை உருவாக்க முடியும். மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சி அமையும்போது தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல முடியும். இந்தியாவை காக்க இந்தியா கூட்டணியை வெல்ல வைக்க வேண்டியது நமது அரசியல் கடமை மட்டுமல்ல, கொள்கை கடமையும்தான். முத்தமிழறிஞர் நூற்றாண்டு விழாவில் நாம் எடுத்து கொள்ள வேண்டிய உறுதிமொழி என்பது 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்பதுதான். திமுகவின் பவள விழா ஆண்டில் நாம் எடுத்துக் கொள்கிற உறுதிமொழி நாடாளுமன்றத்தில் ஆட்சி அதிகாரம் செலுத்துகிற கூட்டணி கட்சியாக நமது இயக்கத்தை உயர்த்த வேண்டும். அதற்காக உங்களில் ஒருவன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அழைக்கிறேன். 40க்கு 40 வெற்றி பெற்றே தீருவோம். இந்தியா கூட்டணி வெற்றிக்கு பாடுபட இந்த வேலூர் மண்ணில் நடைபெறும் முப்பெரும்விழாவில் உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கதிர்ஆனந்த், எம்எல்ஏக்கள் ஜே.எல்.ஈஸ்வரப்பன், அமுலு விஜயன், க.தேவராஜி, கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலி அறிமுகம்
முப்பெரும் விழாவில் ‘மக்களுடன் ஸ்டாலின்’ என்ற செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்தாக வேண்டும் என்ற திராவிட கோட்பாட்டின்படி ‘மக்களுடன் ஸ்டாலின்’ என்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், முதியோர், பெண்கள், பட்டதாரிகள், இளைஞர்கள் என்று யாருக்கு எந்தத் திட்டம் தேவை என்பதை எளிதாக அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயலியின் ஒரு பிரிவில் ‘உங்கள் திட்டங்கள்’ என்ற பொத்தான் இருக்கும். பொதுமக்கள் பதிவு செய்யும் சுயவிவரத்தைப் பொறுத்து, எது பொருந்துமோ அந்த திட்டங்கள் சார்ந்த தகவல்களை இந்த செயலியின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். திமுக மக்களுக்கு என்ன செய்தது என்றும், தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது என்றும் ஒவ்வொரு தொகுதியைப் பற்றியும் முழுதாக தெரிந்து கொள்ளலாம். 234 தொகுதிகளைப் பற்றிய அரசின் திட்டங்கள் சார்ந்த முழு தகவல்கள் இருக்கும். இச்செயலியில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் பற்றியும், முதலமைச்சரின் களச் செயல்பாடுகள் பற்றியும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் முதல் கட்சி உறுப்பினர்கள் வரை அனைவரிடமும் பொதுமக்களே கேள்விகளைக் கேட்கலாம். முதலமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் என யாரிடம் வேண்டுமென்றாலும் இந்த செயலின் வாயிலாகப் பொதுமக்கள் அழைத்துப் பேசலாம்.