சென்னை: அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களையும் 102 தாய்சேய் நல தொலைபேசி சேவை மூலம் கண்காணித்து மருத்துவ ரீதியாக உரிய அறிவுரைகள் வழங்குவதற்குரிய சேவையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதிஷ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை கூடுதல் இயக்குநர் சோமசுந்தரம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி கூடுதல் இயக்குநர் சாந்தாராமன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
வரும் 20ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு முதல்வரால் 946 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான பணி ஆணைகள் வழங்கப்பட உள்ளது. அதோடுமட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் மருத்துவத்துறையில் உதவியாளர் பணியிடங்களைத் தேர்ந்தெடுத்தோர் எண்ணிக்கை 523 ஆகும். அவர்களுக்கான பணி ஆணையினை முதல்வர் தர இருக்கிறார். அதேபோல் ஆலோசகர் என்று சொல்லக்கூடிய பொறுப்புகளுக்கு 5 என ஆக மொத்தம் 1474 பணியாளர்களுக்கு முதல்வர் பணி ஆணையினை தர இருக்கிறார்.
கல்லூரி முதல்வர்கள் பணிமூப்பு அடைந்து பணியில் இருந்து செல்லும்போது அவர் இடத்திற்கு இன்னொருவர் நியமிக்கப்பட வேண்டும். ஒருவர் கல்லூரியில் இருந்து பணி ஓய்வு பெறும்போது அதே நாளில் அக்கல்லூரியில் உள்ள மூத்த பேராசிரியர் பொறுப்பு பணி எடுத்துக் கொள்வார்கள். காலியிடம் என்பதே கிடையாது. கல்லூரி முதல்வர் என்னென்ன பணியினை செய்தாரோ அதேப் பணியினை பொறுப்பு முதல்வரும் செய்வார்கள். 13 மருத்துவக் கல்லூரிகளில் கல்லூரி முதல்வர்களே இல்லை என்பது போலவும், மருத்துவப் பணிகள் முடங்கி கிடப்பது போன்றும் தோற்றத்தை உருவாக்குவது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.