சென்னை: அரசு கல்லூரியில் சேருவதற்குத்தான் மாணவர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர். இந்த மாற்றத்தைக் கொண்டு வந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் 2025-26ம் கல்வியாண்டிற்கான சட்டக் கல்வி சேர்க்கையில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு ஒதுக்கீடு ஆணைகள் வழங்கும் நிகழ்வும், சூரிய மின்சக்தி நிலைய தொடக்க விழா நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று நடந்தது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் சீர்மிகு சட்டப்பள்ளி 5 ஆண்டு ஒருங்கிணைந்த பிஏஎல்எல்பி (ஹானஸ்), பிபிஏ எல்எல்பி (ஹானஸ்), பி.காம் எல்எல்பி (ஹானஸ்) மற்றும் பிசிஏ எல்எல்பி (ஹானஸ்) சட்டப் படிப்புகள் மற்றும் தமிழ்நாட்டில் அமையப் பெற்றுள்ள இணைவு பெற்ற சட்டக் கல்லூரிகளின் 5 ஆண்டு பிஏஎல்எல்பி சட்டப் படிப்பிற்கான இந்த கல்வியாண்டின் சட்டக்கல்வி சேர்க்கையில் கடந்த 10ம் தேதி (10.6.2025) பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலின்படி மாணவர்களுக்கு ஒதுக்கீடு ஆணைகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக வளாகத்தில் சூரிய மின்சக்தி நிலையத்தையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:தற்பொழுது சட்டப்படிப்புகளில் பலமாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது அரசு பள்ளியில் படித்து 98, 99 மற்றும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளனர். அப்பொழுதெல்லாம் தனியார் கல்லூரிகளில் சேருவதற்குத்தான் மாணவர்கள் விரும்புவார்கள். ஆனால் தற்பொழுது அரசு கல்லூரியில் சேருவதற்குத்தான் மாணவர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர். இந்த மாற்றத்தைக் கொண்டு வந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டத்துறைச் செயலாளர் ஜார்ஜ் அலெக்ஸ்சாண்டர், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் பதிவாளரும் சட்ட சேர்க்கைக் குழுவின் தலைவருமான பேராசிரியர் கௌரி ரமேஷ், சட்ட சேர்க்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரஞ்சித் ஓமன் ஆபிரகாம், சீர்மிகு சட்டப்பள்ளியின் புல முதன்மையர் பேராசிரியர் பாலாஜி மற்றும் வளாக இயக்குநர் அசோக் குமார் மற்றும் சட்டப் பல்கலைக் கழக உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.